மைனா, கும்கி, கயல் என புதுமுகங்களோடு தனது பயணத்தை தொடங்கியவர் பிரபுசாலமன். ஆனால் தற்போது தனுஷை வைத்து பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். புதுமுகங்கள் என்கிற தாரக மந்திரம் தளர்ந்து போய்விட்டதா என்றால் அந்த நினைப்பு எப்போதும் தனக்கு உண்டு என்கிறார் பிரபு சாலமன்.
“சில கதைகளின் களம் புதுமுகங்களுக்கு ஏற்றதாக இருக்கும். சில கதைகளில் அனுபவம் மிக்கவர்கள் தேவைப்படும். இப்போது நான் இயக்கும் படத்திற்கு கதாபாத்திரத்தை தாங்கி, பிரதிபலிக்க அனுபவசாலி தேவைப்பட்டது. அதற்காக தனுஷ் தேவைப்பட்டார். அதேசமயம் பிரபலங்களுடன் போகும்போது அவர்களின் வசதிக்கேற்ப சில காம்ப்ரமைஸ் செய்ய வேண்டியும் இருக்குமே என பயம் காட்டினார்கள்… என்னை பொறுத்தவரை சின்னச்சின்ன காம்ப்ரமைஸ் மென்மையான அணுகுமுறையை உருவாக்கும். ஆனால் அதற்கு கூட எனக்கு இந்த படத்தில் சந்தர்ப்பம் அமைய வில்லை” என்கிறார் பிரபு சாலமன்..
இந்தப்படத்தின் கதையைக்கூட கேட்காமல் 60 நாள் கால்ஷீட்டை ஒரே கட்டமாக தூக்கி தந்தாராம் தனுஷ். “ஷூட்டிங் ஆரம்பித்து பத்து நாட்கள் வரை படத்தின் கதை என்ன என்பதே அவருக்கு தெரியாது அவரது கதாபாத்திரத்தை பற்றி மட்டுமே சொல்லி இருந்தேன் அதற்கு பிறகுதான் முழு கதையையும் சொன்னேன். ஒரு புதுமுகம் மாதிரி அருமையாக நடித்துக் கொடுத்தார். என்ன எடுக்கிறோம் என்று மானிட்டர் கூட பார்க்க மாட்டார். ஓடும் ரயில் மீது உயிரை பணயம் வைத்து ஓடுவது, ஸ்டன்ட் செய்வது என்று தூள் கிளப்பி இருக்கிறார் தனுஷ்” என தனுஷிற்கு பாராட்டு பத்திரம் வாசிக்கிறார் பிரபு சாலமன்..