தடுப்பூசி போட்டுக்கொண்டு ஹீரோவாக நடித்த தினேஷ் மாஸ்டர்

‘பிரபுதேவா’ நடித்த மனதை திருடிவிட்டாய் படம் மூலம் டான்ஸ் மாஸ்டர் ஆனவர் தினேஷ்.. பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்ற இவர் தற்போது ‘ஒரு குப்பைக் கதை’ தம மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். .

இதில் கதாநாயகியாக வழக்கு எண் புகழ் மனிஷா நடித்துள்ளார். இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இந்தப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி என்பவர் இயக்கியுள்ளார். தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் இந்தப்படத்தை வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின்.

நாளை மே-25ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில், நடனத்தில் இருந்து நடிப்புக்கு மாறிய அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார் தினேஷ் மாஸ்டர்

ஒருமுறை இயக்குனர் அமீரை சந்திக்க அவரது அலுவலகம் சென்றபோது அங்கே இயக்குனரும் ‘ஒரு குப்பை கதை’ படத்தின் தயாரிப்பாளருமான அஸ்லம் வந்திருந்தார். அவர்தான் இந்தக்கதைக்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள் என கூறினார்.. இயக்குனர் காளி ரங்கசாமியும் எனது எளிமையான தோற்றத்தை பார்த்து இந்தக்கதைக்கு நான் பொருந்துவேன் என நம்பினார்.

இந்தப்படத்தில் குப்பை அள்ளுபவராக நடித்துள்ளேன். இந்தப்படத்திற்காக குப்பை வண்டியுடன் சுற்றினேன்.. நிஜமாகவே குப்பைகளையும் அள்ளினேன். ஒரு குப்பையில் என்னவெல்லாம் இருக்கும் என நீங்கள் நினைப்பீர்களோ அதையெல்லாம் தாண்டி நினைக்காதது எல்லாம் அதில் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன். குப்பை அள்ளுபவர்களில் சிலர் அவற்றை சகித்துக்கொண்டு வேலை செய்வதற்காகவே குடிக்கிறார்கள் என்பதும் இன்னும் சிலர் குடிக்காமலேயே இந்த வேலையை செய்கிறார்கள் என நேரில் கண்டபோதுதான் குப்பை அள்ளுபவர்களின் வாழ்வின் உண்மையான சிரமங்களும் அவர்கள் எப்படி போற்றி வணங்கப்படவேண்டியவர்கள் என்பதையும் அறிந்துகொண்டேன்

அப்போதிருந்து குப்பை அள்ளுபவர்கள் எதிர்ப்பட்டால் சில நிமிடங்கள் அவர்களுடன் நின்று பேசிவிட்டுத்தான் போகிறேன். குப்பை வண்டிகள் கடந்து சென்றால் மூக்கை பொத்திக்கொள்வார்கள்.. நான் அப்படி செய்வதில்லை. ரோட்டில் குப்பை கிடந்தாலோ, அல்லது யாரவது குப்பையை நடுரோட்டில் வீசினாலோ உடனே அதை எடுத்து அப்புறப்படுத்த மனசு துடித்தது. பொதுவாக குப்பை அள்ளுபவர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக மாதம் இரண்டுமுறை தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள்.. நானும் அப்படி ஊசி போட்டுக்கொண்டுதான் இந்தப்படத்தில் நடித்தேன்” என்கிறார் தினேஷ் மாஸ்டர் .

DineshManishaokkஒரு குப்பை கதைதினேஷ்