நல்ல சினிமாவை அதன் ஒளிப்பதிவுக்காக நேசிப்பவர்கள் ஒளிப்பதிவாளர் அஷோக் குமாரை நிச்சயம் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு மிகவும் நேர்த்தியான ஒளிப்பதிவால் பல வெற்றிப்படங்களில் தனது அழுத்தமான முத்திரையை பதித்தவர் அஷோக் குமார்.
குறிப்பாக இயக்குனர் மகேந்திரன், கதையும் அஷோக் குமாரும் ஒரேநேரத்தில் கைவசம் இருந்தால்தான் படப்பிடிப்பிற்கே கிளம்புவார். அப்படி உருவான அற்புத படைப்புகள் தான் ‘நெஞ்சத்தை கிள்ளாதே’, ‘ஜானி’ ஆகியவை. இதுதவிர பி.வாசு, ஷங்கர், பவித்ரன் ஆகியோரின் படங்களிலும் பணிபுரிந்துள்ள இவர் ஒளிப்பதிவுக்காக தேசியவிருது வாங்கியவர்.
கடந்த பலவருடங்களாக திரையுலகில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் தற்போது ஒரு மாத காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். தற்போது உடல்நலம் சற்று மோசமாகவே, சிகிச்சைக்காக சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அஷோக்குமார் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப இறைவனை பிரார்த்திப்போமாக..!