நீண்டும் வாகை சூடவேண்டும் என்கிற வெறியுடன் ‘சண்டிவீரன்’ மூலம் ஆக்ரோஷமாக திரும்பியிருக்கிறார் இயக்குனர் சற்குணம். இதுவரை சிட்டி பையனாக நடித்துவந்த அதர்வாவை புதிய களத்தில் துடிப்பான கிராமத்து இளைஞனாக, தஞ்சை மாவட்ட சண்டிவீரனாக மாற்றியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார்.
இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா, படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் பாலா முன்னிலையில் நடைபெற்றது. படத்தின் ட்ரெய்லராய் பார்க்கும்போது, ஊரில் உள்ள ஆண்கள் அத்தனை பேரும் தங்களது வீட்டு பரண்களில் வைத்திருந்த அருவா, வேல் கம்புகளை தூக்கிக்கொண்டு ஓடுவதாக காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
இதன்மூலம் மதுரை மாவட்ட பின்னணியில் அடிக்கடி வெளியாகும் அடிதடி கலாச்சாரத்தை, தனது தஞ்சை மாவட்டத்துக்கும் இயக்குனர் சற்குணம் கொண்டுவந்துவிட்டாரா என நிருபர் ஒருவர் கேட்டார்.. “அப்படி இல்லை.. அடிதடி என்பது மதுரை மாவட்டத்தில் மட்டும் இல்லை.. தஞ்சை மண்ணிலும் அந்த வீரமும் வேகமும் பொருந்திய மனிதர்கள் இருக்கிறார்கள். இதுவரை காட்டாத அவர்களின் பக்கத்தை, நான் அருகில் இருந்து எனது அனுபவத்தில் பார்த்ததைத்தான் காட்டியுள்ளேன்” என்கிறார் சற்குணம்.
கோலிசோடா படத்திற்கு இசையமைத்த அருணகிரி என்பவர்தான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜிப்ரானை அறிமுகப்படுத்திய சற்குணம் ஏன் அவருடன் தொடர்ந்து பணியாற்றவில்லை என கேட்டால், “ஜிப்ரான் இப்போது கமலின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஆகிவிட்டார். தொடர்ந்து அவரது படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருவதால் தான் அவருடன் பணியாற்ற முடியவில்லை” என்கிறார் சற்குணம்.