“என்னையும் மிஞ்சிவிட்டார் பிரம்மா” – இயக்குனர் இமயம் பாராட்டு..!

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது பட்டியலில் சிர்டந்த தமிழ்ப்படத்துக்கான பிரிவில் விருதை தட்டிச்சென்றது குற்றம் கடிதல் திரைப்படம். கிரிஸ் பிலிம்ஸ் தயாரித்த இந்தப்படத்தை அனைத்து விழாக்களிலும் கலந்துகொள்ளவைத்து இன்று தேசிய விருதுக்கும் சொந்தம் ஆக்கியுள்ளது என்றால் அது ஜே.எஸ்.கே பிலிம்ஸ் முயற்சியினால் தான்.

இந்தப்படத்தை வரும் மேமாதம் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் வெளியிடுகிறது.  அதன் முன்னோட்டமாக ‘குற்றம் கடிதல்’ படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பாரதிராஜா, சரத்குமார், தங்கமீன்கள் ராம், மகிழ்திருமேனி, கார்த்திக் சுப்புராஜ், எஸ்.ஜே.சூர்யா, யுடிவி தனஞ்செயன், நலன் குமாரசாமி, பாலாஜி தரணீதரன் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய இயக்குனர் இமயம் பாரதிராஜா, “தேசிய விருது கமிட்டியின் சூரி என்கிற வகையில் நான் இந்த விழாவுக்கு வந்திருக்க கூடாது தான். ஆனால் இந்தப்படத்தை பற்றி நாலு வார்த்தை பேசவேண்டும் என்பதற்காகத்தான் இங்கே வந்துள்ளேன்.. நான் கூட எனக்கு தேவையான கேரக்டருக்கு ஒரு நடிகரை தேர்ந்தெடுத்து ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு போய் கேரக்டருக்கு ஏற்றமாதிரி அவரை மாற்றிக்கொள்வேன். ஆனால் இந்தப்படத்தின் இயக்குனர் பிரம்மாவோ படத்தின் கேரக்டர்களாக வாழ்ந்திருக்க கூடிய நபர்களை தேடிப்பிடித்து நடிக்க வைத்திருக்கிறார். அந்தவிதத்தில் என்னையும் மிஞ்சிவிட்டார் பிரம்மா” என பாராட்டினார்.

விழாவில் பேசிய ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார், “அவார்டுக்காக நாங்கள் படம் எடுக்கவில்லை.. வணிக ரீதியாக எடுத்தாலும் அவை அவார்டுக்குரிய படங்களாக இருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியே” என்றவர் இயக்குனர் பிரம்மாவுக்கும், தயாரிப்பாளர் கிறிஸ்டிக்கும் அவர்கள் இருவரது தந்தையின் கையாலேயே மரியாதை செய்யவைத்து இரண்டு தரப்பினரையும் மகிழ்வித்தார்.

BharathirajaBrammaKutram Kadithalஎன்னையும் மிஞ்சிவிட்டார் பிரம்மாஎஸ்.ஜே.சூர்யாகார்த்திக் சுப்புராஜ்கிறிஸ்டிகுற்றம் கடிதல்’சரத்குமார்ஜே.எஸ்.கே பிலிம்ஸ்தங்கமீன்கள் ராம்நலன் குமாரசாமிபாரதிராஜாபாலாஜி தரணீதரன்மகிழ்திருமேனியுடிவி தனஞ்செயன்