நேரடியாக சென்னைக்கே வந்துவிட்டார் பாலகிருஷ்ணா..!

ஆந்திர சினிமாவில் கடந்த நாற்பது வருடங்களாக கதாநாயகனாகவே நடித்து வருபவர் நடிகர் பாலகிருஷ்ணா. கதாநாயகனாகவே நூறு படங்களை வெற்றிகரமாக முடித்துள்ளார். இவரது நூறாவது படமாக வெளியானது ‘கௌதமி புத்ர சாதகர்ணி’ படம்.. தமிழில் வானம் படத்தை இயக்கிய கிரிஷ் தான் இந்தப்படத்தையும் இயக்கியிருந்தார்..

வரலாற்றில் உண்மையிலேயே வாழ்ந்த ஓர் மாபெரும் அரசனான கௌதமி புத்ர சாதகர்ணி என்பவரை பற்றிய வாழ்க்கை வரலாற்றை உலகுக்கு அறிவிக்கும் விதமாக இந்தப்படம் உருவாகியுள்ளது. அதுவும் வெறும் 79 நாட்களில். தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப்படம் தற்போது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘சாதகர்ணி’ என்கிற பெயரில் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. மொழிமாற்று படமாக வெளியானாலும் கூட, இந்த விழாவில் அதிசயமாக படத்தின் நாயகன் பாலகிருஷ்ணா கலந்துகொண்டார். மேலும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் கார்த்தி ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இசையை கார்த்தி வெளியிட கே.எஸ்.ரவிகுமார் பெற்றுக் கொண்டார்.

விழாவில் நடிகர் பாலகிருஷ்ணா பேசும்போது, “நானும் உங்களில் ஒருத்தன் தான் சென்னையில் பிறந்தவன் சென்னையில் வளர்ந்தவன் தமிழ் நாட்டு தண்ணிய குடிச்சி வளர்ந்தவன். என்னோட நூறாவது படத்திற்கு நிறைய கதைகளை கேட்டேன். புது மாதிரியாக ஏதாவது செய்யணும்னு நினைச்சுட்டு இருந்தேன். எதுவும் சரியா வரலே டைரக்டர் கிருஷ் இந்த கதையை சொன்னார் உடனே ஒகே சொன்னேன். இது நம்மளை ஆண்ட ஒரு நம் மன்னனின் கதை.

இந்த கதையை கேட்டவுடனே எங்கப்பா என்.டி.ஆர், பெரியப்பா எம்.ஜி.ஆர், சித்தப்பா சிவாஜி இவங்க இவங்களை நினைச்சுக்கிட்டேன். இவங்க இன்ஸ்பிரேசன் இல்லாம எந்த படங்களும் பண்ண முடியாது..இந்த படத்தில் நடித்தது என்னோட பெத்தவங்க ஆசியும் பெரியவங்க ஆசியும் தான். இது இல்லாம சாதகர்ணியோட அம்மா கவுதமியோட ஆசிர்வாதமும் சாதகர்ணியின் ஆசியும் தான் இந்த படத்தில் நான் நடித்தது.

அம்மாவை பெருமைப்படுத்துங்கள். நிச்சயம் நல்லா இருப்போம்.. அடுத்ததா நான் கே.எஸ் ரவிகுமார் படத்திலே நடிக்கிறேன்..சூட்டிங் கூட இங்க தான் கும்பகோணத்தில் 40 நாட்கள் நடக்குது..நானும் உங்களில் ஒருத்தன் தான்.. இந்த படத்தை குடும்பத்தோட போய் பாருங்க. தாயை பெருமைப்படுத்திய இந்த படம் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோருக்கும் பிடிக்கும். இவ்வாறு பாலகிருஷ்ணா தமிழில் பேசினார்

BalakrishnaGauthamiPuthraSathakarniபாலகிருஷ்ணா