தமிழ் சினிமா ஆரம்பித்த காலம் தொட்டு முன்னணி நட்சித்திரங்கள் பலரு நடிக்க, கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ். தற்போது விஜய் நடிக்கும் பைரவா படத்தை ஏராளமான பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமானமுறையில் தயாரித்து வருகிறார்கள்.
பரதன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர்களுடன் அபர்ணா வினோத், ஜெகபதிபாபு, சதீஷ், ஒய்.ஜி.மகேந்திரன், விஜயராகவன், தம்பி ராமைய்யா, டேனியல் பாலாஜி, மைம் கோபி, ‘ஆடுகளம்’ நரேன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தார்கள்.. தற்போது பைரவா இசைவெளியீட்டு விழா கைவிடப்பட்டுள்ளது.
இது பற்றி பைரவா படத்தின் தயாரிப்பாளர்கள் கூறும்போது, “தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எதிர்பாராத இழப்பால் இவ்விழா கைவிடப்பட்டுள்ளது. காரணம், எங்களுடைய விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நம்நாடு திரைப்படத்தில் அம்மா அவர்கள் நடித்தார்கள்.
அதோடு மட்டுமல்லாமல், எங்களுடைய குடும்பத்தில் ஒருவராக அம்மா அவர்களை மதித்து வந்தோம். அவருடைய இழப்பின் காரணமாக பைரவா இசைவெளியீட்டு விழாவை ரத்து செய்துவிட்டோம். மேலும் விஜய் அவர்களும் மேற்கண்ட காரணத்திற்காக இசைவெளியீட்டை பிரமாண்ட விழாவாக நடத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார். அதனால், எளிமையான முறையில் வரும் டிசம்பர் 23 ஆம் தேதி பாடல்களை உலகெங்கும் நேரடியாக வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என கூறியுள்ளார்கள்.