நடிகர் ஆரியை பொறுத்தவரை, தான் படங்களில் நடிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்கள் எல்லாம் இயற்கை விவசாயம், இயற்கை உணவு முறை, நாட்டு விதைகள் பாதுகாப்பு என ஆரோக்கியமான சமூக சேவை சிந்தனையிலேயே செயல்பட்டு வருபவர்.. அதுமட்டுமல்ல, தனக்கு கிடைக்கும் எந்த மேடையிலும் இதுபற்றி பேச கொஞ்சமும் தயங்காதவர்.. அப்படித்தான் தான் புதிதாக நடிக்கவுள்ள ‘மௌன வலை’ படத்தின் பூஜை நிகழ்ச்சியையும் கூட உணவு விழிப்புணர்வு கூட்டமாக அவர் மாற்றிக்கொண்டார்.
ஆரி நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “மௌன வலை”, இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாகும். ஆரி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஸ்மிருதி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மதுசூதனன், ஹரிஷ் பெராடி, அருள்ஜோதி, உபாசனா ஆகியோர் நடிக்கிறார்கள். ‘களம்’ படத்தை இயக்கிய பெஸ்ட் ராபர்ட் இப்படத்தை இயக்குகிறார்.
இந்த பூஜை நிகழ்வில் இயற்கை உணவு சார்ந்த விளக்கங்களை வேளாண் விஞ்ஞானிகல் மற்றும் நிபுணர்களை அழைத்து வந்து பேசவைத்தார் ஆரி.. வந்திருந்தவர்களுக்கு அவர் விருந்தாக அளித்த காலை உணவும் கூட இயற்கையான உணவுப்பொருட்களாகவே அமைந்திருந்தது ஆச்சர்யம் அளித்தது.