பெப்சி விஜயன் மகன் சபரிஷ் கதாநாயகனாக நடித்துள்ள ‘அசுரகுலம்’ படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்தபடத்தை பழம்பெரும் இயக்குனர் கே.சங்கரின் பேரனான விக்னேஷ் மேனன் என்பவர் இயக்கியுள்ளார். சத்யா இந்தப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பிரபு, பி.வாசு, சந்தானம், கலைப்புலி தாணு, தம்பி ராமையா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பிரபு பேசும்போது, “நான் சங்கிலி படத்தில் அறிமுகமானபோது, அதில் தான் பெப்சி விஜயனும் அறிமுகமானார். அந்தப்படத்தில் அப்பா (நடிகர் திலகம்) என்னை அடிப்பது போன்ற காட்சி.. இரண்டுமுறை அடிப்பதற்கு பதிலாக பத்து தடவை அடி வெளுத்துவிட்டார். கேட்டால் இந்த சாக்குல தானே பையன்களை அடிக்கடி முடியுது.. இவனுங்க பண்ணுற டார்ச்சர் தாங்கமுடியலப்பான்னு பக்கத்துல இருந்தவங்ககிட்ட சொன்னார்.. இப்பதானே அப்பாக்கள் படும்பாடு நமக்கும் தெரிகிறது” என தனது தந்தையிடம் அடிவாங்கிய புது தகவல் ஒன்றை சொன்னார்.