மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தை தமிழில் பிரியதர்ஷன் ‘நிமிர்’ என்கிற பெயரில் இயக்கியுள்ளார். பஹத் பாசில் கேரக்டரில் இங்கே உதயநிதி நடித்துள்ளார், கதாநாயகிகளாக நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி, இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்துக்கு டர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.
ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உதயநிதி பேசியதாவது,
“படப்பிடிப்புக்கு போகும்போது எங்களிடம் பாடல்களே இல்லை. பிரியதர்ஷன் சார் சொன்னதை அப்படியே செய்தேன். மகேந்திரன் சார் நான் நடித்த படங்களை பார்த்திருக்கிறேன் என்று சொன்னதும், நிமிர் படத்தில் அவருடன் இணைந்து நடித்ததும் எனக்கு பெருமை. தெறி படத்துக்கு பிறகு பல படங்களில் நடிக்க அழைத்தும் மறுத்து விட்ட மகேந்திரன் சார், பிரியதர்ஷன் படத்தில் நடித்தே தீருவேன் என நடிக்க வந்தார். சமுத்திரகனி சாருடன் 3 நாட்கள் ரொம்ப கஷ்டப்பட்டு புரண்டு சண்டை போட்டது மறக்க முடியாத அனுபவம். ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் எனக்கு ரொம்ப ஆதரவாக இருந்தார். நான் நடித்த படங்களிலேயே மிகவும் அழகான காட்சியமைப்புகள் இந்த படத்தில் தான்.
கருணாகரனுக்கும் எனக்கும் தான் நடிப்பில் போட்டி. எம்எஸ் பாஸ்கர் இயக்குனர் போதும் என்றாலும் ஒன் மோர் கேட்பவர். யாரையெல்லாம் நடிக்க வைக்கலாம் என பிரியதர்ஷன் சாருக்கு உதவியாக இருந்தார் சமுத்திரகனி. அவரே வசனமும் எழுதியிருக்கிறார். நான் நடித்த படங்கள் எதையும் பிரியதர்ஷன் சார் பார்த்ததில்லை. ஒரு நாள் திடீரென என்னை அழைத்து நீ தான் நடிக்கிற என்றார். எனக்கே கொஞ்சம் ஷாக். படம் முடிந்த பிறகு முதல் காட்சி பார்த்து விட்டு, அடுத்த படத்தில் ஒரு கேரக்டர் ரோல் இருந்தா கூட கூப்பிடுங்க, நடிக்க வரேன்னு அவரிடம் சொன்னேன்” என்றார் நாயகன் உதயநிதி ஸ்டாலின்.
“இந்த படத்துக்கு பிரியதர்ஷன் சாரிடம் நான் 10 நடிகர்கள் பெயரை பரிந்துரைத்தேன். அவர்கள் எல்லோரையும் அவர் வேண்டாம் என்று மறுத்து விட்டவர் ஒரு நாள் அவரே என்னை அழைத்து உதயநிதி எப்படி இருப்பார் என்று கேட்டார். அத்தோடு நானும் படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார். வசனமும் என்னை எழுத சொன்னார். ஆனால் வசனம் நான் எழுதவில்லை. அவர் தான் உண்மையில் எழுதியிருக்கிறார். பெருந்தன்மையாக என் பெயரை போட்டிருக்கிறார். பாலச்சந்தர் மறைவிற்கு பிறகு இன்னொரு குருநாதர் எனக்கு கிடைத்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் ராஜசேகர் மாஸ்டர் என்னையும், உதயநிதியையும் ரொம்பவே கஷ்டப்படுத்தி விட்டார்” என்றார் சமுத்திரகனி.
“பிரியதர்ஷன் என்னுடைய ஃபேவரைட் இயக்குனர். அவர் இயக்கும் படத்தை தயாரித்தது என்னுடைய அதிர்ஷ்டம். சமுத்திகனி, எம்எஸ் பாஸ்கர், மகேந்திரன் சார் என எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கருணாகரன் மலையாளம் சினிமாவிலும் வந்து நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். நாங்கள் மட்டும் தான் சென்னையில் ஆபீஸே இல்லாமல் ஒரு படத்தை முடித்திருக்கிறோம். அந்தளவுக்கு ரெட் ஜெயண்டும், ஃபோர் பிரேம்ஸும் எங்களுக்கு நிறைய உதவி செய்தனர். இனி சென்னையிலும் ஆபீஸ் போட்டு நிறைய படங்களை தயாரிப்போம்” என்றார் தயாரிப்பாளர் சந்தோஷ் குருவில்லா.
இது தமிழில் பிரியதர்ஷன் இயக்கியுள்ள 7வது படம். 36 நாட்களில் படத்தை ஒரே கட்டமாக முடித்துள்ளார்கள் என்பது ஹைலைட்.