46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!
இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத முத்திரையைப் பதித்துள்ள கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம், தனது 46-வது ஆண்டைப் பெருமையுடன் கொண்டாடி வருகிறது. அந்த மகத்தான திரைப்பயணத்தில் மேலும் ஒரு பெருமைமிகு அத்தியாயமாக ‘அமரன்’ திரைப்படம் இடம்பிடித்துள்ளது.
கமல்ஹாசன் வழங்கியுள்ள இப்படத்தை கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளனர். வலுவான கதைகளையும், திறமையான படைப்பாளிகளையும் மிகப் பெரிய திரை அனுபவமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவர்களின் உறுதியின் அடையாளமாக ‘அமரன்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி ஆகியோரின் அர்ப்பணிப்புமிக்க நடிப்பு, கதையின் உணர்வுகளையும், உண்மைத்தன்மையையும் சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
தற்போது, 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் ‘அமரன்’ திரைப்படம் மூன்று உயரிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.
– சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது – ராஜ்குமார் பெரியசாமி
– சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை) தேசிய விருது – ஜி.வி. பிரகாஷ் குமார்
– சிறந்த படத்தொகுப்பாளர் தேசிய விருது – ஆர். கலைவாணன்
கதையைத் தெளிவான பார்வையுடனும், வலுவான திரைக்கதை மொழியுடனும் திரையில் உயிர்ப்பித்ததற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இந்த தேசிய விருதைப் பெற்றுள்ளார். படத்தின் உணர்வுகளையும், காட்சிகளின் தீவிரத்தையும் தனது பின்னணி இசையின் மூலம் மேலும் வலுப்படுத்தியதற்காக ஜி.வி.பிரகாஷ் குமார் கௌரவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், திரைப்படத்தின் கதை சொல்லும் ஓட்டத்தை நேர்த்தியாக வடிவமைத்த ஆர். கலைவாணனின் படத்தொகுப்பு தேசிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது.
இந்த மூன்று தேசிய விருதுகளும் தனிநபர்களின் சாதனையை மட்டுமல்லாமல், தயாரிப்பாளரின் நம்பிக்கை, கலைஞர்களின் அர்ப்பணிப்பு மற்றும் படைப்புக் குழுவின் ஒட்டுமொத்த உழைப்பின் வெற்றியையும் கொண்டாடுகின்றன.
46-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், அர்த்தமுள்ள, லட்சியமிக்க மற்றும் காலத்தால் நிலைத்திருக்கும் இந்திய திரைப்படங்களை தொடர்ந்து உருவாக்கும் தனது உறுதியை ‘அமரன்’ திரைப்படத்தின் இந்த தேசிய விருதுகள் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.