ராதாமோகன் டைரக்சனில் மீண்டும் ஜோதிகா..!

கடந்த வருடம் இந்தியில் வெளியாகி மகத்தான வெற்றிபெற்ற படம் ‘துமாரி சுலு’. 20 கோடி ரூபாய் முதலீட்டில் தயாரான இந்தப் படம், 50 கோடி ரூபாய் வசூலித்து மகத்தான வெற்றி பெற்றது.. இந்தப்படத்தில் வித்யாபாலன் முக்கிய வேடத்தில் நடிக்க, மனவ் கௌல், நேகா துபியா, மலிஷ்கா மென்டோன்ஸா ஆகியோரும் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநர் சுரேஷ் திரிவேணி இயக்கியிருந்த இந்தப்படம் நகைச்சுவை கலந்த குடும்ப படமாக உருவாகி இருந்தது.

‘துமாரி சுலு’ இந்திப் படத்தின் தமிழாக்க உரிமையை சென்னையின் பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தை தயாரித்துக்கொண்டிருக்கும் இந்த நிறுவனம் அடுத்ததாக இந்த ‘துமாரி சுலு’வை தமிழில் ரீமேக் செய்கிறது.

இந்தியில் வித்யாபாலன் நடித்த இரவு நேர வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளர் வேடத்தில் நடிகை ஜோதிகா நடிக்கிறார். குடும்பத் தலைவியான பெண் ஒருவர் நிகழ்ச்சித்தொகுப்பாளராகி நடத்தும் நிகழ்ச்சி நேயர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று ஹிட்டாகிறது. அதேசமயம் அந்த தொகுப்பாளினியின் இயல்பான குடும்ப வாழ்க்கையையும் வெற்றிகரமாகத் தொடர்கிறது.

தமிழில் இந்தப்படத்தை ராதா மோகன் கூறுகிறார்: ‘‘இந்தியில் வெற்றி பெற்ற ‘துமாரி சுலு’ படத்தைத் தமிழில் இயக்குவது மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. இதில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஜோதிகாவுடன் ‘மொழி’ படத்தில் நான் பணிபுரிந்திருக்கிறேன். அவருடன் மீண்டும் பணிபுரியக் கிடைத்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. யதார்த்த பாணியிலான ‘துமாரி சுலு’வின் தமிழ்ப் பதிப்பு, ஜோதிகாவின் நடிப்பில் இந்தியைப் போலவே மிகவும் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

இந்தப்படத்தில் ‘தொகுப்பாளினி’யாக நடிக்கவுள்ள ஜோதிகா தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளார். ‘‘நான் வித்யாபாலனின் தீவிர ரசிகை. அவருடைய படங்கள் எதையும் தவறவிட்டதில்லை. அவர் நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தமானது ‘துமாரி சுலு’. வித்யாபாலன் நடித்த வேடத்தை தமிழில் நான் செய்வது, என்னை கௌரவப்படுத்துவதாகவே கருதுகிறேன்” என கோரியுள்ளார் ஜோதிகா.

தயாரிப்பாளரான தனஞ்ஜெயன் கூறும்போது, “இந்த அருமையான படத்தின் தமிழ் உரிமை எங்களுக்குக் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். தமிழில் உருவாகும் இந்தப் படத்தில் ஜோதிகா நடிக்கிறார். தமிழ் சினிமாவில் பரவலான கவனம் ஈர்த்த ராதா மோகன் இதை இயக்குகிறார். இது எங்களுக்கு மறக்க முடியாத ஒரு படமாக அமையும் என்று நம்புகிறோம்” என கூறியுள்ளார்.

இந்தப்படம் தமிழில் ரெமேக் ஆவது குறித்து நடிகை வித்யாபாலனும் தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார். “ஒரு தமிழ்ப்பெண் என்ற முறையில், எங்களது படம் தமிழ் மொழியில் தயாராவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்னைப் பொறுத்த வரை ‘துமாரி சுலு’ மறக்க முடியாத முக்கியமான ஒரு படம். தமிழ் ரசிகர்களிடன் சுலுவின் அன்பைப் பரப்பவிருக்கும் ஜோதிகாவுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்” என அவர் கூறியுள்ளார்.

தமிழ்ப் படத்தில் இடம்பெறும் பிற கலைஞர்கள் தொடர்பான செய்திகள் முடிவு செய்யப்பட்டவுடன் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.

JyothikaRadha Mohanஜோதிகாதுமாரி சுலுமொழிராதா மோகன்வித்யாபாலன்