தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான படம் படம் ‘மாரி’. தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. இந்தப் படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். முதல் பாகத்தை போலவே இதிலும் ரோபோ சங்கர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்தப்படத்திற்கு யார் இசையமைப்பார்கள் என்கிற கேள்வியும் ஆர்வமும் ரசிகர்களிடம் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்தநிலையில் யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் ஒரு காலத்தில் ஹிட் பாடல்களை கொடுத்துவந்த தனுஷ்-யுவன் சங்கர் ராஜா கூட்டணி பத்து வருடங்களுக்கு அதாவது யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு இப்போதுதான் மீண்டும் இணைகிறார்கள்.
இந்த பத்து வருடங்களில் அனிருத், ஷான் ரோல்டன் என தனது ஆஸ்தான இசையமைப்பாளர்களுடனும் ஏ.ஆர்.ரஹ்மான், மணிசர்மா, விஜய் ஆண்டனி, தேவிஸ்ரீ பிரசாத், தினா என பல இசையமைப்பாளர்கள் தனுஷ் படத்திற்கு இசையமைத்துள்ளனர். இப்போது மீண்டும் தனுஷுடன் தனது அதிரடி ஆட்டத்தை யுவன் சங்கர் ராஜா தொடங்குவார் என உறுதியாக நம்பலாம்.