ஹாலிவுட்டில் தான், இயக்குனர்கள் தள்ளாத வயதிலும் கூட சுறுசுறுப்பாக படம் இயக்குவார்கள் என்கிற பேச்சு எப்போதும் உண்டு.. அதை கண்கூடாக பார்த்தும் இருக்கிறோம். ஆனால்அதை உடைத்தெறியும் வகையில் 86 வயது ‘இளைஞரான’ இயக்குனர் முக்தா சீனிவாசன், ‘மனித நேயர் ராமானுஜர்’ என்கிற படத்தை இயக்குவதன் மூலம் மீண்டும் டைரக்சன் தொப்பியை எடுத்து அணிந்துள்ளார்.
சிவாஜி, ரஜினி, கமல், முத்துராமன் ஜெய்சங்கர், ஏ.வி.எம்.ராஜன், ஜெமினிகணேசன், பாண்டியராஜன் உட்பட பல நடிகர்களை வைத்து படம் தயாரித்து இயக்கியவர் முக்தா.வி.சீனிவாசன், இவர் திரைப்பட துறைக்கு வந்தே 70 ஆண்டுகளை கடந்துவிட்டார். கடந்த 25 வருடங்களாக படம் இயக்குவதை நிறுத்தி வைத்திருந்தவருக்கு ராமானுஜர் வாழ்க்கையை படமாக்கவேண்டும் என்கிற ஆவல் உந்தித்தள்ள, மீண்டும் இந்த தள்ளாத வயதில் டைரக்சனில் அடியெடுத்து வைத்துள்ளார்.
“பிராமணர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் செல்லலாம் என்கிற கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்த முதல் ஆள் ராமானுஜர்தான். இது எனது 45வது படம். மார்ச் மாதம் படப்பிடிப்பை துவக்கி மூன்றே மாதத்தில் திரையிட உள்ளோம். பிரபல நடிகர்கள் திரையில் கதாபாத்திரமாக பதிய மாட்டார்கள் என்பதால் ராமானுஜராக புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்கிறேன்” என கூறியுள்ளார் முக்தா வி.சீனிவாசன்.