டிஜிட்டலில் உருவான ‘அடிமைப்பெண்’ ; ஜூலை 7ல் ரிலீஸ்.. !

“எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வரும் இந்த வேளையில் அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அடிமைப்பெண்’ திரைப்படம் டிஜிட்டலில் புதுப்பொலிவுடன் வரும் ஜூலை-7ல் ரிலீஸாகிறது

இந்த படத்தில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இரண்டு வேடங்களில் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் அசோகன், ஆர்.எஸ்.மனோகர், சோ, பண்டரிபாய், ராஜஸ்ரீ, ஜோதிலட்சுமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கே.வி. மகாதேவன் இசையமைத்திருக்கிறார். கே.சங்கர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

ஜெய்ப்பூர் அரண்மனையில் படப்பிடிப்பு, பாலைவனத்தில் ஒட்டகச் சண்டை, க்ளைமாக்ஸில் சிங்கத்துடன், எம்.ஜி.ஆர் நேருக்கு நேர் மோதும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி என பல கமர்ஷியல் அம்சங்களைக் கொண்ட படம் அடிமைப்பெண்.

இந்தப்படத்தில் இன்னும் சில ஆச்சர்யமான விஷயங்கள் நடந்துள்ளன.. பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல் மூலம் தான் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார்.

இசைத்திலகம் கே.வி.மகாதேவன் ஜெயலலிதாவை ‘அம்மா என்றால் அன்பு’ என்ற பாடலை பாடவைத்தார். ஜெயலலிதா பாடிய முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவும், எம்.ஜி.ஆரும் கடைசியாக நடித்த படமும் இதுதான்.

இந்த படத்தில் டி.எம்.எஸ் பாடிய ‘தாய் இல்லாமல் நானில்லை’ என்ற பாடல் எம்.ஜி.ஆருக்கு தாய்மார்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. இப்படி சுவாரஸ்யமான அம்சங்களுடனும், திருப்புமுனைகள் நிறைந்த திரைக்கதையுடனும் உருவான இந்த படம் பிரம்மாண்டமான வெற்றிப் படமாக அமைந்து, வெள்ளி விழா கொண்டாடியது.

வசூலிலும், அந்த காலத்திலேயே இரண்டு கோடியே முப்பது லட்சம் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் இதன் மதிப்பு 350 கோடியை தாண்டியிருக்கும் என்பது வியப்புக்குரிய விஷயம்.

Adimai PenM.G.RR J Balajiஅடிமைப் பெண்எம்.ஜி.ஆர்ஜெயலலிதா