நடிப்புக்கு முக்கியாத்துவம் கதாநாயகி நடிகைகளுக்கு ஒரு கதை பிடித்திருந்தால் அவர்களே அப்படத்தை தயாரிக்கவும் தயங்குவதில்லை. இதற்கு சமீபத்திய உதாரணம் நயன்தாரா. ‘அறம்’ வெற்றிப் படத்தின் கதை பிடித்து அதை நயன்தாராவே தயாரித்தார். படமும் பேசப்பட்டது. பெரிய வெற்றியும் பெற்றது .
அவரைப் போலவே தற்போது நடிகை சதாவும் தன்னை நாயகியாக வைத்து ‘டார்ச் லைட்’ என்கிற படத்தை எடுத்து வருகிற இயக்குநர் மஜீத்தின் திறமையில் நம்பிக்கை வைத்து அவரது இயக்கத்தில் அடுத்த படத்தைத் தயாரித்து வருகிறார். விஜய்யை வைத்து ‘தமிழன் ‘படத்தை இயக்கிய அதே மஜீத் தான்.
.
சதா இந்தப்படத்தை தயாரித்து நடிக்க ஒப்புக்கொள்ள முழு முதற்காரணம் ‘டார்ச் லைட்’ படத்தின் கதை தான். பெண்களுக்கான விழிப்புணர்வுப் படமாக ‘டார்ச் லைட்’ படம் உருவாகி வருகிறது.
வறுமையால் பாலியல் தொழிலுக்கு வந்த பெண்கள் பற்றி பேசுகிறது இந்தப்படம். நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட்டுடன் நின்று கொண்டு லாரி ஓட்டுநர்களிடம் பாலியல் தொழில் செய்த பெண்கள் பற்றிய கதை இது. பெண்களைப் போகப்பொருளாக்கி அவர்களை தங்கள் இச்சையைத் தீர்க்கும் ஒரு நுகர்பொருளாக்கிடும் சமூக அவலத்தையும் அதன் பின்னணியில் இயங்கும் இழிவான ஆண்களையும் இப்படம் தோலுரிக்கிறது.
முக்கியமான விஷயம் என்னவென்றால் இது ஒரு பீரியட் பிலிம். 90களில் நடக்கும் கதையாக இந்தப்படம் உருவாகிறது . படத்தின் கதையைக் கேட்ட நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கியிருக்கிறார்கள். நடிகை சதா மட்டும் தைரியமாக நடிக்கச் சம்மதித்துள்ளார்.
இதுபற்றி இயக்குனர் மஜீதி கூறும்போது, “நான் பல நடிகைகளிடம் இந்தக் கதையைக் கூறிய போது பாலியல் தொழிலாளியாக நடிக்க வேண்டுமே என்று பலரும் மறுத்து விட்டனர். இப்படி 4Oபேரிடம் சொல்லியிருப்பேன். கடைசியில் சதாவிடம் கூறினேன். கதையைக் கேட்டு முடித்ததும் கண்ணீர் விட்டார். வீடியோப் பதிவுகளை எல்லாம் பார்த்து விட்டுக் கலங்கினார். தான் நடிக்கச் சம்மதம் என்றார். இப்படம் சதா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். அதே போல நடிகை ரித்விகாவும் கதை கேட்டு கலங்கிக் கண்ணீர் விட்டார். நிச்சயம் இப்படம் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும். பெண்களின் கண்ணீர்க் கதைகள் பெண்களிடம் போய்ச் சேர வேண்டும். அப்போதுதான் அவர்கள் விழிப்புணர்வு பெறுவார்கள். ” என்கிறார் இயக்குநர் .
சதா, ரித்விகா தவிர புதுமுகம் உதயா, இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா ரங்கநாதன் மற்றும் பலர் பிற பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்காக திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, குற்றாலம், சென்னை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.