நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவுக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத் தலைவர் சி.கே. ரங்கநாதன்-தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், ஏற்கனவே திருமண நிச்சயிக்கப்பட்டு இருந்தநிலையில் இன்று காலை சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டில் கலைஞர் முன்னிலையில் நடைபெற்றது.
திருமணத்தில் கலைஞர் கருணாநிதி மற்றும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். அரசியல் கட்சியினர் யாரும் பங்கேற்கவில்லை. குறித்த நேரத்தில் மணமக்கள் வர, காலை 10.10 மணிக்கு தனது அறையில் இருந்து திருமணம் நடைபெற்ற இடத்துக்கு வந்தார் கலைஞர்.
மணமக்கள் கருணாநிதியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். மணமக்கள் வாழ்க என்று மூன்று முறை கோஷம் எழுப்பப்பட்ட பிறகு கருணாநிதி தாலியை எடுத்துக் கொடுத்து 10.25 மணிக்கு கெட்டி மேளம் முழங்க தமிழ் முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
இந்த திருமண விழாவில் மு.க.அழகிரி, காந்தி அழகிரி, செல்வி குடும்பத்தினர், மு.க.தமிழரசு, ராஜாத்தி அம்மாள், கனிமொழி, துர்கா ஸ்டாலின், தயாநிதிமாறன், கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் அமிர்தம், முரசொலி செல்வம், கவிஞர் வைரமுத்து மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.