கடந்த இரண்டு வருடங்களில் சூர்யாவிற்கு அஞ்சான், மாசு என்கிற மாசிலாமணி என தொடர்ந்து இரண்டு படங்கள் பெரிதாகப் போகவில்லை என்பது வருத்தத்தைத் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.. அதுவும் அவை இரண்டும் மிகப்பெரிய செலவில் மிகுந்த எதிர்பார்ப்புடன் எடுக்கப்பட்ட படங்கள் என்பது கவனிக்கத்தக்கது..
ஆனால் இந்த மனக்குறைகளுக்கு மருந்து பூசும் விதமாக கடந்த 2015ல் ஒரு நல்ல தயாரிப்பாளராக அங்கீகாரம் தந்துள்ளனர் ரசிகர்கள். இவரது ‘2டி’ நிறுவன தயாரிப்பில் முதல் படைப்பாக பெண்கள் மேம்பாட்டை அடிப்படையாக கொண்டு வெளியான ’36 வயதினிலே’ படமும் ‘சரியான குழந்தை வளர்ப்பு’ என்கிற கருத்தை அடிப்படையாக கொண்டு இரண்டாவது படைப்பாக வெளியாகியுள்ள ‘பசங்க-2’ படமும் நல்ல வரவேற்பை பெற்றன.
குறிப்பாக எந்த வணிக நோக்கமும் இன்றி, சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை சொல்வதற்கு மட்டுமே இந்த இரண்டு படங்களையும் தயாரித்தார் சூர்யா.. அந்த கருத்து மக்களுக்கு சரியாக சென்று சேரும் விதமாக முதல் படத்தில் ஜோதிகாவும், இரண்டாவது படத்தில் சூர்யாவும் நடிகர்களாகவும் தங்களது பங்களிப்பை தந்திருந்தனர். ஆக 2015ஆம் ஆண்டு சூர்யாவுக்கு சிறப்புமிக்க ஆண்டாக அமைந்தது என்பதில் சந்தேகமே இல்லை.