சூர்யா-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன-12ஆம் தேதி வெளியாகவுள்ள படம் தான் ‘தானா சேர்ந்த கூட்டம். ஸ்டுடியோகிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது இதில் சூர்யா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் சூர்யா பேசியது “அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் எல்லா கனவுகளும் சிறப்பாக நிறைவேறவேண்டும். நமது துறையிலிருந்து அடுத்த பயணத்தை துவங்கயிருக்கும் ரஜினி சார் அவர்களுக்கும், கமல் சார் அவர்களுக்கும் விஷால் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் எல்லாருடைய வரவும் நல்வரவாக இருக்கவேண்டும். எங்கள் அனைவரின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு.
இந்தப்படம் துவங்குவதற்கு முன் விக்னேஷ் சிவனை சந்திக்க போவதாக ஹரி சாரிடம் கூறினேன் அதற்கு அவர் நிச்சயமாக விக்னேஷ் சிவனுடன் படம் பண்ணவேண்டும் என்று கூறினார். என் வீட்டில் உள்ள அனைவரும் அவருடன் படம் பண்ணவேண்டும் என்று கூறினார்கள்.
1987-ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது என்றாலும் முற்றிலும் வேறு ஓரு பாதையில் கதை செல்கின்றது. எல்லா படங்களிலும் தொடக்கத்தில் வரும் புகை பிடிக்காதீர், மது அருந்தாதீர் போன்ற எச்சரிக்கை வாசகங்கள் எங்கள் படத்தில் வராது அப்படி ஓரு படத்தை எடுத்துள்ளார். அதற்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். 7 வருடங்களுக்கு பிறகு பண்டிகை தினத்தன்று எனது படம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார் சூர்யா.
நிகழ்ச்சியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியது, “தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் ‘தானா சேர்ந்த கூட்டம்’ சிறப்பாக நடைபெறுவதற்கு முக்கியமான காரணம். நான் ‘ஸ்பெஷல் 26’ படத்தின் உரிமையை வாங்கி. அந்த படத்தின் முக்கியமான கருவை மட்டும் எடுத்து புதிதாக ஒரு திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியுள்ளேன்.
சூர்யா நடித்த ‘காக்க காக்க’ போன்ற படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். அந்த படம் தான் என்னை போன்ற பலரை சினிமாவை நோக்கி பயணிக்க வைத்தது. சூர்யாவுக்கு படத்தில் புதுமையான லுக்கை கொடுத்துள்ளேன். இதற்கு மேல் மற்ற விஷயங்களை நீங்கள் படத்தில் பாருங்கள்.
கீர்த்தி சுரேஷ் என்னை பிரதர், பிரதர் என்று அழுத்தி கூறிவிட்டார். நீங்கள் பயப்பட வேண்டாம். பாதுகாப்பான ஒரு இடத்தில் தான் இருக்கிறீர்கள். ரம்யா கிருஷ்ணன், கமல்ஹாசனை போல் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடிய ஆற்றலை பெற்றவர். அனிருத்தின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம்” என்றார்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியது :- தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு என்னுடைய பங்களிப்பை என்னால் சரியாக கொடுக்க முடியவில்லை. அனைத்தையும் பொறுத்துக்கொண்ட சூர்யா, விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு நன்றி.
இன்றைக்கு இருக்கக்கூடிய கால சூழ்நிலையில் நல்லவனாக வாழ்வதை விட வல்லவனாக வாழ வேண்டியுள்ளது. இனிமேல் என்னோடு இருப்பவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் முடிவுகளை வாழ்கையில் நான் எப்போதும் எடுக்க மாட்டேன். தானா சேர்ந்த கூட்டம் ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் என்று நாங்கள் கூறிவருகிறோம்.
ஆனால் அந்த படத்தில் உள்ள ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக்கொண்டு விக்கி இப்படத்துக்கு புதுமையான ஒரு திரைக்கதையை அமைத்துள்ளார். ஒரு நேரடி தமிழ் படத்துக்கு என்ன உழைப்பு தேவையோ அதைவிட பல மடங்கு உழைப்பை விக்கி இந்த படத்துக்கு கொடுத்துள்ளார். கடின உழைப்பை போடாமல் சூர்யா ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும். அயன் படத்தில் வருவது போல் பிரெஷ்ஷானா சூர்யாவை இப்படத்தில் பார்க்கலாம்” என்றார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.