தமிழ் திரையுலகில் மார்கண்டேயன் என்றால் அது நடிகர் சிவகுமாருக்கு மட்டுமே சொந்தமாகிப்போன பெயராகும்.. சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலம் முதல் அவர் கதாநாயகனாக நடித்த படங்களில் எல்லாம் அவரது தோற்றம் அன்று கண்டதுபோல எந்தவித மாற்றமும் இல்லாமல் பொலிவுடன் இருப்பது தான் இந்தப்பெயர் அவருக்கு சூட்டப்பட காரணம்.
1965ல் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் ஏ.வி.எம்.தயாரித்த ‘காக்கும் கரங்கள்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான சிவகுமாருக்கு இது பொன்விழா ஆண்டு. சிவகுமார் கிட்டத்தட்ட 193 படங்களில் நடித்துள்ளார் என புள்ளிவிபரம் சொல்கிறது. ஒவ்வொன்றிலும் விதவிதமான கதாபாத்திரங்கள், ஏன் வில்லன் கதாபாத்திரத்தில் கூட நடித்து தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்திக்கொண்டவர்.
2001ல் ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தில் நடித்ததோடு தனது நடிப்பு பயணத்தை நிறுத்திக்கொண்ட சிவகுமார் தனது மகன்கள் சூர்யா, கார்த்தி இருவரின் வளர்ச்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதுமட்டுமல்ல ஏழை மாணவர்களுக்கு உதவும் விதமாக அகரம் பவுண்டேஷன் என்கிற அறக்கட்டளையை நிறுவி 35 வருடங்களாக மிகப்பெரிய கல்விச்சேவையும் ஆற்றி வருகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிவகுமார் என்கிற மாமனிதருக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.