குற்றம் கடிதல் பாடத்தில் அறிமுகமாகி காவனம் ஈர்த்தவர் பாவல் நவகீதன். அதன்பின் மகளிர் மட்டும், குலேபகாவலி ஆகிய படங்களில் நடித்தவர் வெற்றிமாறன் டைரக்சனில் உருவாகியுள்ள வடசென்னை என்னை இன்னும் அடையாளம் காட்டும் என்கிறார்.
படத்தில் நடித்த அனுபவம் பற்றி இவர் கூறும்போது, “வடசென்னையில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது கதையைப் பற்றியும், எனது கதாபாத்திரத்தைப் பற்றியும் எதுவும் கேட்கவில்லை. அந்த அளவுக்கு இயக்குநர் வெற்றி மாறன் சார் மீது நம்பிக்கை இருக்கிறது. எனது நடிப்பைப் பார்த்து எனது கதாபாத்திரத்தை நீடிக்கச் செய்திருக்கிறார். மேலும், வெற்றி மாறன் சார் என்னிடம் படம் இயக்குவதை பிறகு பார்த்துக் கொள். நடிப்பு உனக்கு நன்றாக வருகிறது என்று ஊக்குவித்தார். இதற்கு முன் பிரம்மா சாரும், ரஞ்சித் சாரும் இருவருமே என்னை பாராட்டியிருக்கிறார்கள்.
ஆகையால், இனிமேல் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். வடசென்னையில் பவனுக்கு தம்பியாக ‘சிவா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்தைப் பற்றி குறிப்பிட்டு சொல்ல முடியாது. மம்முட்டி சாருடன் ‘பேரன்பு’ படத்தில் நடித்திருக்கிறேன். அந்த படத்திற்காக காத்திருக்கிறேன்.
மம்முட்டி சாருடன் நடிக்கும்போது கூட பயம் வரவில்லை. வடசென்னை குழுவுடன் சேர்ந்து நடிக்கும்போது பயத்துடன் தான் நடித்தேன். ஏனென்றால், தனுஷ் சாரும், சமுத்திரக்கனி சாரும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த பிறகு தான் அவர்களுக்கான வசனம் கொடுக்கப்படும். அவர்களும் அதைப் படித்து விட்டு எளிமையாக நடித்துவிடுவார்கள். இனிமேல் நீயும் இந்த திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அனைவரும் என்னை ஊக்குவித்தார்கள்” என கூறியுள்ளார் பாவல் நவகீதன்..