இந்திய விவசாயிகள் தினத்தன்று நம் விவசாயிகளை கொண்டாடும் வகையில் சென்னை சேப்பாக்கம் அண்ணா அரங்கில் “உழவே தலை விருதுகள் வழங்கும் விழா வெகு விமர்சையாக நடந்தது. இவ்விழாவை இந்திரா குழுமத்தின் இந்திரா ஆக்ரோ டெக் விவசாய்த்தையும் விவசாயிகளையும் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்திருகின்றது.
இவ்விழாவில் திரைக்கதை ஜித்தர் திரு.கே.பாக்கியராஜ், இயக்குனர் திரு.தங்கர் பச்சான், ராகவா லாரன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் கே.பாக்யராஜ் தனது கையால் இந்த விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்த விருதுபெற்றவர்களில் திரையுலகை சேர்ந்த இயக்குனர், நடிகர் என இரு தளத்தில் இயங்கிவரும் தங்கர் பச்சான், ராகவா லாரன்ஸ் ஆகியோரும் இடம்பிடித்திருந்தனர்.
உழவே தலை இளைஞர் சக்தி விருதை பெற்ற நடிகர் ராகவா லாரன்ஸ் பேசும்போது, “என்னுடைய பார்வையில் விவசாயிகள் என்பவர்கள் கடவுள்.. இன்று அவர்கள் கையால் இந்த விருது வாங்கியதை கடவுள் கொடுத்த விருதாகத்தான் பார்க்கிறேன்.. இதுவரை சினிமாவில் நடிப்புக்கு விருது வாங்கிய நான் நிஜத்துக்கு விருது வாங்கியது நிச்சயம் எனக்கு புதிய அனுபவம்.
இங்கே பேசிய ஒருவர் இளநீர் வாங்கி குடிப்பது உடலுக்கு மட்டுமல்ல, விவசாயின் வாழ்க்கைக்கும் ஆரோக்கியம் என்று கூறினார். என்னுடைய காப்பகத்தில் சுமார் 6௦ குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களை பார்க்கும்போதெல்லாம் காபி, டீ சாப்பிட்டீர்களா என கேட்பது வழக்கம். இனி அவர்களிடம் ‘இளநீர் சாப்பிட்டீர்களா என்றுதான் கேட்பேன். ஆம் என் குழந்தைகளுக்கு இனி இளநீர் தான் கொடுக்கப்போகிறேன்” என புதிய முடிவு ஒன்றை அறிவித்தார்.