அட்டகத்தி தினேஷ் நடிப்பில் கெனன்யா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘ஒருநாள் கூத்து’. படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்து பல மாதங்களான நிலையில் தற்போது படத்தை ரிலீஸ் பண்ணுவதற்கான வேலை வந்திருக்கிறது.. மியா ஜார்ஜ், ரித்விகா, நிவேதா பெத்துராஜ் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ள இந்தப்படத்தில் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நெல்சன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
படம் ரிலீஸாக இருப்பதை ஒட்டி இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.. கல்யாணம் என்பதே ஒருநாள் கூத்து என்கிற நிலைமையில் தனது திருமணம் அதைவிட குறைவாக அரைநாள் கூத்தாக மாறிப்போன கதையை கூறி கலகலப்பை உண்டாக்கினார் கருணாகரன்.
“கப்பல் படத்தில் நான் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே நடிக்கவேண்டிய நிலையில் எனது திருமணம் நடைபெற்றது.. அதன்பின் முழுதாக ஜிகர்தண்டா படத்திற்கு இரண்டு மாதங்கள் கால்ஷீட் தந்துவிட்டதால், அந்தப்படத்திற்கு ஓடிவிடுவேன் என எனது திருமண தினத்தன்று மதியத்திற்கு மேலே என்னை கப்பல் படக்குழுவினர் இழுத்து சென்றுவிட்டார்கள்.. அந்தவகையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜால் என் திருமணம் அரைநாள் கூத்து ஆகிவிட்டது” என்று விளக்கம் அளித்தார் கருணாகரன்..
இதைவிட முக்கியமான விஷயம் கடந்த இரண்டு படங்களாக தலைமுடியை சீவாமல் பரட்டை தலையுடன் நடித்த அட்டகத்தி தினேஷ், இந்தப்படத்தில் முதன்முறையாக தலைசீவி நடித்திருக்கிறார்.