சிறந்த நடிகர்களை கௌரவிக்க வழங்கப்படும் விருதுகளில் மிக முக்கியமான ஒன்றாக அனைவராலும் கருதப்படுவது ‘செவாலியே’ விருது தான்.. பிரான்ஸ் நாட்டினர் வழங்கும் இந்த விருது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கமலின் வாழ்நாள் கலை சாதனையையும் நடிப்பையும் பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.
இதற்கு முன் தமிழ் திரையுலகில் இந்த விருதை பெற்றவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். அவருக்கு அந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட பின் நம்ம ஊரில் தற்போது விருது, சிவாஜி இருவரையும் கௌரவிக்கும் விதமாக சிறந்த நடிகர்களுக்கு ‘செவாலியே சிவாஜி சாதனையாளர் என்கிற விருது வழங்கும் அளவுக்கு ‘செவாலியே’ விருது ரொம்பவே பிரசித்தி பெற்றுவிட்டது.
இதுபற்றி கமல் கூறியுள்ளதாவது,” பிரெஞ்சு அரசு கலை, இலக்கியத்திற்கான செவாலியே விருதை எனக்கு அளிக்க மனம் உவந்துள்ளது. பெருமிதத்துடன், நன்றியுடன் பணிவுற்று அந்த விருதினை ஏற்கிறேன். அவ்விருதின் பெருமை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய ஐயா சிவாஜி கணேசன் அவர்களையும் வடநாட்டு பாமரரும் அரிய செய்த காலம் சென்ற சத்ய ஜித்ரோவையும் என் கரம் கூப்பி வணங்குகிறேன்.
இனி நான் செய்ய வேண்டி கலை, இலக்கிய பணிக்கான ஊக்கியாகவே இவ்விருதினை நான் உணர்கிறேன். இதுவரையிலான என் கலை பயணம் தனிமனித பயணம் இல்லை என்பதை உணர்கிறேன். 4 வயது முதல் என் கைப்பிடித்து படியேற்றி பீடத்தில் அமர்த்தி பார்க்கும் தாய்மை உள்ளம் கொண்டவர்களுக்கும் இவ்விருது அர்ப்பணம்” என குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.