டாக்டர் அப்துல் கலாம் மறைவு : வைரமுத்து-பாரதிராஜா இரங்கல்..!

நமது முன்னாள் ஜனாதிபதியும் உலக அரங்கில் நம்மை தலைநிமிரச்செய்த விஞ்ஞானியுமான பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நேற்று காலமானார்.. அவரது மறைவால் நாட்டின் மக்கள் அனைவரும் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது மறைவு குறித்து கவிஞர் வைரமுத்துவும் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

வைரமுத்து

எங்கள் குடும்பத்தின் மூத்த தலைமகனின் வாழ்வு முடிந்துவிட்டதாய் உடைந்து நிற்கிறேன். இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் அறிவடையாளமாய் விளங்கிய ஒரு ஞானப் பெருமகன் நம்மிடையே இனி இல்லை என்பதை நம்பமுடியவில்லை.

இந்தியாவின் கடைக்கோடியில் கடைசிக் குடிமகனாய்ப் பிறந்து இந்தியாவின் முதற்குடிமகனாய் உயர்ந்தது சந்தர்ப்பத்தால் வந்தது அல்ல; சாதனையால் வந்தது. தடம்மாறும் சமூகமும், தடுமாறும் அரசியலும் அப்துல் கலாமின் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றினால் நாடு நலம்பெறும். அய்யா அப்துல்கலாம் அவர்களே உங்கள் புகழை வாழ்நாளெல்லாம் உயர்த்திப்பிடிக்கும் திருக்கூட்டத்தில் ஒருவனாய் நானும் இருப்பேன்

பாரதிராஜா

இந்தியாவின் வல்லமையை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்ற ஒப்பற்ற தலைமகனின் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவருடைய மறைவு தமிழர்களுக்கும், இந்திய மாணவ சமூகத்திற்கும், ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். திரு. அப்துல் கலாம் அவர்கள் தனி மனிதர் அல்ல.. தமிழனின் அடையாளம்.

இவ்வாறு அவர்கள் தங்களது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

அப்துல் கலாம்பாரதிராஜாவைரமுத்து