ஹாரர் திரில்லராக அருண்.சி என்பவர் இயக்கியுள்ள படம் ‘ஆறாம் திணை’. இந்தப்படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். கதையின் நாயகனாக மொட்ட ராஜேந்திரன். முக்கியமான கதாபாத்திரங்களில் ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர்.
ராஜ் கே.சோழன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினரை வாழ்த்த இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு, திரையரங்குகள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர் ஆரி, கவிஞர் சினேகன், மறைந்த அப்துல் கலாம் அவர்களின் உதவியாளரான பொன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இசைத்தகட்டை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட திரு. அபிராமி ராமநாதன் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் பேசிய திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், “தியேட்டர்காரர்கள் கொளையடிக்கிறார்கள், அதனால் சின்ன படங்கள் சாகிறது என குற்றம் சாட்டுகிறார்கள். கடந்த வருடத்தில் நான் ஐம்பது படங்கள் விநியோகம் பண்ணினேன். அதுல 45 படங்கள் சின்ன படங்கள் தான். இன்றைக்கு விஜய் பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவர் முதன்முதலா நடித்தபோது அது சின்ன படம் தான். எங்களை போன்ற தியேட்டர்காரர்கள் சின்ன படம் என அதை புறக்கணித்திருந்தால் அவர் இன்று இந்த அளவிற்கு வளர்ந்திருக்க முடியுமா..?
தியேட்டர்களில் சில சின்ன படங்களுக்கு 15 பேர் கூட வர மாட்டேங்கிறாங்க.. இதுனால எங்களுக்கு ஏசி போடுற காசு கூட கிடைக்காது. அப்படின்னா அந்த படத்தை நிறுத்துறத தவிர எங்களுக்கு வேற வழியில்ல.. இதோ இப்ப அருவின்னு சின்ன படம் ஒன்னு வெளியாச்சு. ஆனால் முதல்நாள்ல இருந்து நல்ல கூட்டம்.. அந்தப்படத்துக்கு மட்டும் கூட்டம் எப்படி வந்துச்சு. மக்களுக்கு மட்டும் எப்படியோ அது தெரியுது. அந்த வித்தை மட்டும் எங்களுக்கு தெரிஞ்சிருந்தா அத்தனை சின்ன படங்களையும் ஓட வைச்சிருப்போம். அந்த சக்சஸ் பார்முலாவ கண்டுபிடியுங்க.
முதல்ல திருட்டு விசிடி பிரச்சனை இருந்துச்சு. இப்போ படம் ரிலீஸாகி 15 நாட்கள்ல அமேசான்ல படம் வந்துருது. இது லீகலா வருதுன்னாலும் குறைஞ்சது ஒரு மாதத்திற்காவது படங்களை இப்படி அமேசான்ல கொடுக்காம இருங்க. திரையரங்குகள் தான் வசூலை மொத்தமாக அள்ளிக்கொடுக்க முடியும். அமேசனால அப்படி அள்ளிக்கொடுக்க முடியாது. தியேட்டர்கள் பொன்முட்டையிடும் வாத்து. அதை நீங்கள் அழித்து விடாதீர்கள்” என சூடு கிளப்பினார் அபிராமி ராமநாதன்.