தம்பியின் காதலுக்கு மரியாதை செய்த ஆர்யா..!

 

ஆர்யாவின் தம்பி சத்யா நடித்துள்ள இரண்டாவது படம் தான் ‘அமரகாவியம்’. இந்தப்படத்தை ஆர்யாவே தனது சொந்த பட நிறுவனமான ‘தி ஷோ பீப்பிள்’ மூலம் தயாரித்துள்ளார். விஜய் ஆண்டனி நடித்த ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா சங்கர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். அருமையான காதல் காவியமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக கேரள நடிகை மியா ஜார்ஜ் நடிக்கிறார்.

இந்தப்படத்தின் எடிட்டிங் மற்றும் இசைக்கோர்ப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் ஆர்யா இந்தப்படத்தை முழுவதுமாக பார்த்தார். காட்சி முடிந்தவுடன் ஆர்யாவின் கண்களில் கண்ணீர் துளிகள் தென்பட ஈரமான கண்களுடன் யாரிடமும் பேசாமல் அவர் திரையரங்கை விட்டு கிளம்பி தான் கதாநாயகனாக நடிக்கும் மற்றொரு படத்தின் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார்.

அங்கு போனவர் திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. சட்டென தனது உதவியாளரை அழைத்து 143 கேக்குகள் வாங்கி வரச்சொல்லி தனது படக்குழுவினருக்கு கொடுத்து மகிழ்ந்தார்.  தனது தம்பி நடித்த படம் அந்த அளவுக்கு ஆர்யாவை நெகிழ வைத்துவிட்டதாம்.   இதுவரை சொல்லப்பட்ட காதல் கதைகளில் இது ஒரு காவியம் என்று சொல்லப்பட இருக்கும் இந்த அமர காவியத்துக்கு ஆர்யா கொடுத்த தகுதி சான்றிதழ் என்றுகூட இதை எடுத்துக்கொள்ளலாம்.

AaryaAmara KaaviyamJeeva ShankarMia GeorgeNaanSathyaThe Show People