மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் மலையாள திரையுலகில் படங்களை இயக்கிக்கொண்டே இந்திக்கும் சென்று அங்கே தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டவர்.. அவரது சிஷ்யரான ஏ.எல்.விஜய்யும் அந்த வழியை பின்பற்றி இப்போது முதன்முதலாக பாலிவுட்டில் தனது முதல் படத்தை இயக்குவதற்காக அடியெடுத்து வைக்கிறார்..
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் பிரபுதேவா, தமன்னா இணைந்து நடிக்கிறார்கள்.. தவிர பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். ஷாரூக்கானின் ‘ஹாப்பி நியூ இயர்’ திரைப்படம் மூலம் தேசிய அளவில் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற பெயரை ஈட்டிய ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
பிரபுதேவா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் முனைவர் கே.கணேஷ் மற்றும் மும்பையை சேர்ந்த பாப் கார்ன் எண்ட்யர்டைன்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. தனக்கு பிடித்த, பொருத்தமான வேடங்கள் கிடைத்தால் மட்டுமே படங்களில் நடிக்கும் பிரபு தேவா, நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் நடிகராக களம் இறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.