குடும்ப பின்னணியில் ஒரு ஹாரர் த்ரில்லர் ‘கண்மணி பாப்பா’..!

நேரெதிர் எண்ணம் கொண்ட கணவன் – மனைவி மற்றும் அவர்களது செல்ல மகள் இவர்களைச் சுற்றி நடக்கும் எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ள படம் தான் ‘கண்மணி பாப்பா’. வனஷாக்‌ஷி கிரியேஷன்ஸ் சார்பில் ராஜேந்திர பிரசாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஸ்ரீமணி இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் “தொட்டால் தொடரும்”, “சட்டம் ஒரு இருட்டறை ”, “6 அத்தியாயங்கள்” போன்ற படங்களில் நடித்த தமன்குமார் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மியாஸ்ரீ நடித்துள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகள் மானஷ்வி, கண்மணி பாப்பாவாக நடித்துள்ளார். இவர்களுடன் சிங்கம்புலி, சந்தோஷ் சரவணன், சிவம், நாகா, ஹேமா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு, எதிர்பார்த்ததைப் போல் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதே சமயத்தில் கையிருப்பும் கரைந்து போவதால், எதிர்மறை எண்ணம் தலைதூக்கத் துவண்டு போகிறார். அவரது மனைவி தான் அவருக்கு ஆறுதலாக இருந்து நம்பிக்கை தந்து வருகிறார். ஒருகட்டத்தில் அவருக்கு வர வேண்டிய தொகை முழுதும் கிடைத்து விட, தனது நீண்ட நாள் கனவான சொந்த வீட்டை வாங்க நினைக்கிறார். அதற்காக அழகான ஒரு வீட்டையும் தேர்வு செய்கிறார். எதிர்பாராத விதமாக அந்த நொடியிலிருந்து அவரது குழந்தையைச் சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கிறது. இதெல்லாம் ஏன் நடக்கிறது? என புரியாமல் குழம்பிப் போகிறார் நாயகன். தனது மனைவிக்கும், குழந்தைக்கும் தெரியாமல் இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க நினைக்கிறார். நாயகன் அந்த முயற்சியில் இருக்கும் போதே, அவரது குழந்தை ஒரு மர்ம நபரால் கடத்தப்படுகிறாள்.

எதற்காக அந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தன?, அந்த வீட்டிற்கும் அமானுஷ்ய சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு?, குழந்தையைக் கடத்திய மர்ம நபர் யார்? எதற்காக அவர் குழந்தையைக் கடத்தினார்? இவற்றை எல்லாம் அந்த நாயகன் எவ்வாறு கண்டு பிடிக்கிறார்? என்பதை முழுக்க முழுக்க ஒரு குழந்தையைச் சுற்றி பின்னப்பட்ட திரைக்கதையில் திகிலான திருப்பங்கள் நிறைந்த ஹாரர் திரில்லர் படமாக தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீமணி.

6 அத்தியாயங்கள்கண்மணி பாப்பாகொட்டாச்சிசட்டம் ஒரு இருட்டறைசந்தோஷ் சரவணன்சிங்கம்புலிசிவம்தமன்குமார்தொட்டால் தொடரும்நாகாமானஷ்விமியாஸ்ரீராஜேந்திர பிரசாத்வனஷாக்‌ஷி கிரியேஷன்ஸ்ஸ்ரீமணிஹேமா