நோர்வே தமிழ்த் திரைப்பட விழா பத்தாவது ஆண்டுகள் நோக்கிய பயணத்தில் அடுத்த ஆண்டு புதிய தடத்தினை பதிக்கவிருக்கின்றது. நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் வழங்கப்படுகின்ற “தமிழர் விருதுகள்” தமிழ் திரைப்படங்களுக்கு மட்டும் அல்லாது சர்வதேச திரைப்படங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. சர்வதேச திரைத் திறமையாளர்களின் பாராட்டைப் பெற்று வருகின்றது.
கடந்த 9 வருடங்களாக தமிழ் சினிமாத் துறையில் சாதித்தவர்கள், தமிழ்நாட்டில் வாழும் கலைஞர்கள் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள், உலகம் முழுவதும் வாழும் தமிழ் கலைஞர்களின் முழுநீளத் திரைப்படங்கள், குறும்படங்கள், காணொளிகள், ஆவணப்படங்கள், அனிமேஷன் திரைப்படங்கள், சர்வதேச மொழி பேசும் திரைப்படங்கள் என அனைத்துக்கும் தமிழர் விருதுகள் வழங்கி வந்தனர்.
அடுத்த ஆண்டில் இருந்து இவற்றோடு 10 சிறந்த “சாதனைத் தமிழர்கள்” என்ற விருதினையும் வழங்கி கௌரவிக்க இருக்கின்றனர். அந்தவகையில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஐந்து கண்டங்களில் பத்து நாடுகளைத் தெரிவு செய்து, பத்து சாதனையாளர்களுக்கு ‘சாதனை தமிழர்’ என்ற சிறந்த ‘தமிழர் விருது’களை வழங்கி, மதிப்பளிக்கும் பணியினை செய்யவிருக்கின்றனர்.
தமிழ் மொழியின் சிறப்புகள் பற்றி எடுத்துச் சொல்லி, கலை, பண்பாடு, வரலாறு அடையாளம் தொடர்பாக வேற்று இனத்தவர்கள் கற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கி, நெருக்கிய தொடர்புகளை நோர்வே தமிழ் திரைப்பட விழா தொடர்ந்தும் வளர்த்து வருகின்றது. நோர்வேயிய அரசின், ஒஸ்லோ, லோரன்ஸ்கூ நகரசபைகளின் மிகப் பெரிய அங்கீகாரத்தினை பெற்று சிறப்பான விழாவாக உருவெடுத்துள்ளது.
நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவின் நான்கு நாட்கள் – நிகழ்ச்சி நிரல்:
நாள் 1: 25.04.2019 வியாழக்கிழமை நேரம்: 17.00 மணி (Rommen Scene)
குறும்படங்கள், காணொளிகள், ஆவணப்படங்கள், முழுநீளத் திரைப்படங்கள் திரையிடல்
நாள் 2: 26.04.2019 வெள்ளிக்கிழமை நேரம்: 17.00 மணி (Rommen Scene)
குறும்படங்கள், காணொளிகள், ஆவணப்படங்கள், முழுநீளத் திரைப்படங்கள் திரையிடல்
நாள் 3: 27.04.2019 சனிக்கிழமை நேரம்: 17.00 மணி (Lillestrøm Kultursenter)
“தமிழர் விருது” வழங்கும் விழாவுடன் நள்ளிரவுச் சூரியன் கலைமாலை.
நாள்: 4: 28.04.2019 ஞாயிற்றுக்கிழமை நேரம்: 13.00 மணி (Utsikten Selskaplokale)
மதிய உணவுடன், கலந்துரையாடல், விருந்தினர்கள் சந்திப்பு – சர்வதேச திரைப்படங்கள் திரையிடல்
உலகத்தில் எத்தனை திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழர்களால் நடத்தப்படும் தனிப் பெரும் விழாவாக, உலக அரங்கில் பேசப்படுகிறது. இத்திரைப்பட விழாவை நோர்வேயில் ஆரம்பித்து வைத்ததில் , நோர்வேயில் வாழ்கின்ற தமிழர்கள் நாம், உலகத் தமிழர்களுடன் இணைந்து பெருமிதம் அடைகின்றோம். இத்திரைப்படவிழாவை அடுத்த படியை நோக்கி நகர்த்துவது உங்கள் பொறுப்பாகும்.