2009ல் முற்றிலும் புதுமுகங்களை வைத்து ‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமானார் சுசீந்திரன். கிராமத்தின் உயிர்மூச்சாக இருக்கும் கபடி விளையாட்டை மையப்படுத்தி விறுவிறுப்பாகவும் நகைச்சுவையாகவும் கதை சொல்லியிருந்தார் சுசீந்திரன். அந்தப்படத்தின் மூலம் விஷ்ணு விஷால், சூரி, அப்புக்குட்டி என தமிழ் சினிமாவுக்கு திறமையான நடிகர்கள் கிடைத்தார்கள்.
வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகத்துக்கு எப்போதுமே எதிர்பார்ப்பு உண்டு தானே..? அதனால் இதுதான் சரியான நேரம் என வெண்ணிலா கபடி குழு’ படத்தின் இரண்டாம் பாகம் பூஜையுடன் நேற்று துவங்கியது. இப்படத்தை சுசீந்திரன் வழங்க சாய் அற்புதம் சினிமாஸ் தயாரிக்கிறது.
இந்தப்படத்தை சுசீந்திரன் இயக்கவில்லை.. கதைப்படி முதல் பாகத்தில் இறந்துவிட்டதால், விஷ்ணுவும் இதில் ஹீரோவாக நடிக்கவில்லை.. மாறாக இந்தப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் செல்வ சேகரன். இவர் பல முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.
இப்படத்தில் விக்ராந்த் நாயகனாக நடிக்கிறார். அவரது ஜோடியாக அர்த்தனா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மேலும் பசுபதி, கிஷோர், சூரி, ரவிமரியா, யோகிபாபு, அப்புக்குட்டி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். செல்வகணேஷ் இசையமைக்கிறார். மாம்பாக்கம் கோவளஞ்ச்சேரி முனீஸ்வரர் கோவிலில் துவங்கிய இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.