இயக்குனர் ராமநாதன் கேபி என்பவர் தான் இயக்கிய “வித்தையடி நானுனக்கு” என்கிற படத்தை சில முக்கியமான திரையுலக புள்ளிகளிடம் போட்டு காண்பித்தபோது, அவர்கள் இந்தப்படம் இன்னார் இன்னாரின் கதையிலிருந்து எடுக்கப்பட்டதுதானே என்று கேட்டார்களாம்.. ஆனால் இயக்குனரோ “நீங்கள் சொன்ன இன்னாரின் கதை எனக்கு தெரியாது. இது யாரை பற்றிய கதையும் இல்லை. ஒரு சாதாரணமான, தமிழ் படம்தான்” என்றாராம்..
அதுசரி யார் இந்த ராமநாதன்..? சில ஆண்டுகளுக்கு முன் சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘ஸ்ரீ’ என்ற படம் நினைவிருக்கிறதா..? அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘வசந்த சேனா வசந்த சேனா…’ பாடல் மிகப் பிரபலம். அந்தப் படத்துக்கு டிஎஸ் முரளிதரன் என்ற பெயரில் இசையமைத்தவர்தான் இப்போது ராமநாதன்.கேபி என பெயர் மாற்றிக் கொண்டு இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். அதுமட்டுமல்ல, படத்தின் இரு கதாபாத்திரங்களில் ஒருவர் இவர்தான். இவருக்கு ஜோடியாக சவுரா சையத் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.
அப்படி என்னதான் கதை..? படத்தில் வெறும் ரெண்டே கேரக்டர்கள் தானாம். வீட்டைவிட்டு ஓடிவந்த ஒரு இளம்பெண். அவள் கார் நடுவழியில் நின்று போக ஒரு நடுத்தர வயது ஆண் உதவிக்கு வருகிறார். படம் முழுக்க அவர்களுக்குள் நடக்கும் போராட்டம்தான் கரு. இதை வைத்து காதல் கதை பண்ணலாம், காமெடி கதை பண்ணலாம், ஏன் பேய்க்கதையாக கூடபண்ணலாம், ஆனால் நான் இதை ஒரு சைகலாஜிக்கல் திரில்லராக, முந்தைய ஹாலிவுட் க்ளாஸிக் ஸ்டைலில் செய்திருக்கிறேன்” என்கிறார் ராமநாதன்.
ஏற்கனவே 20 வருடங்களுக்கு முன் ”ஸ்லூத்” SLEUTH என்று ஒரு படம், இருவர் மட்டுமே நடித்தது. கலெக்டர் என்று மற்றும் ஒரு படம் என அன்றே முயற்சி செய்திருக்கிறார்களாம். அதனால் நான் தான் இதை முதலில் செய்தேன் என சொல்ல முடியாது என்கிற ராமநாதன், ‘பெரிசா மெஸ்ஸேஜ் சொல்லும் அளவுக்கு நாங்க இன்னும் வளரல சார்…. ஆனால் ஒரு நல்ல படம் பார்த்த ஃபீல் கண்டிப்பா கொடுக்கும்னு நம்பறேன்.” என்கிறார். ராமநாதன் கேபி.
வரும் ஜுன்-10ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாகிறது.