நடிகர்கள் : கவின், அம்ரிதா, பாலாஜி, காயத்ரி ரெட்டி, கிரண்ட் கொண்டா மற்றும் பலர்
இசை : பிரிட்டோ மைக்கேல்
ஒளிப்பதிவு : எஸ்.யுவா
இயக்கம் : வினித் வரபிரசாத்
:தயாரிப்பு : ஹெப்சி
ஐடி நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேரும் கவின், முதல் நாளிலேயே இரவு 10 மணிக்கு மேல் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு கிளம்ப, அவரால் அந்த நிறுவன கட்டிடத்தில் இருந்து வெளியேற முடியவில்லை. போதாத குறைக்கு அந்த கட்டிடத்தில் இருக்கும் லிப்ட் தானாகவே இயங்க செய்கிறது. இப்படியான திகில் சம்பவங்களால் கவின் அலறிக்கொண்டிருக்க, திடீரென்று அதே நிறுவனத்தில் பணியாற்றும் அம்ரிதாவும், கவினுடன் சேர்ந்துக்கொள்கிறார். இருவரும் அங்கு நடக்கும் திகில் சம்பவங்களில் சிக்கிக்கொண்டு, உயிர் பிழைக்க ஓடினாலும், அவர்களால் அங்கிருந்து வெளியே செல்ல முடியவில்லை. எதனால் அப்படி நடக்கிறது?, அதன் பின்னணி என்ன? ஆகிய கேள்விகளுக்கான பதில் தான் படத்தின் கதை.
ஐடி நிறுவன ஊழியர் வேடத்தில் கனகச்சிதமாக பொருந்துகிறார் கவின். திகில் சம்பவங்களால் அலறும் காட்சிகளில், நிஜமாகவே பேயை பார்த்தது போல் பயப்படுகிறார்.
நாயகி அம்ரிதாவும் பயப்படுவதில் தனது அபார திறமையை வெளிக்காட்டியிருக்கிறார்.
படத்தின் தொடக்கத்தில், பாலாஜி, முருகானந்தம் உள்ளிட்ட சில கதாப்பாத்திரங்கள் வந்து போக, இறுதியாக வரும் கிரண் கொண்டா மற்றும் காயத்ரி ரெட்டி ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.
எஸ்.யுவாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பிரிட்டோ மைக்கேலின் பின்னணி இசையும், தபஸ் நாயக்கின் ஒலிக்கலவையும் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
ஊழியர்களின் உயிரோடு விளையாடும் ஐடி நிறுவனங்களின் அபாயத்தை வெளிக்காட்டும் கதைக்களத்தை திகிலோடு சேர்த்து சொல்லியிருக்கும் இயக்குநர் வினித் வரபிரசாத், நடுங்க வைக்கும் அளவுக்கு காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
ஒரு லொக்கேஷன், இரண்டு கதாப்பாத்திரங்கள், படம் முழுவதும் வருவது, ஒரே காட்சியை திரும்ப திரும்ப பார்ப்பது போல தோன்றினாலும், அத்தனைக் காட்சிகளிலும் ரசிகர்களை பயமுறுத்துவதற்காக இயக்குநர் கையாண்டிருக்கும் யுக்தி படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறது.
ஐடி நிறுவன ஊழியர்கள் என்றாலே ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்கள் என்ற கண்ணோட்டம் இருந்தாலும், உயிரையே மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு பிரச்சனைகள் கொண்ட அவர்களுடைய வாழ்க்கை பின்னணியை சில நிமிடங்கள் காட்டினாலும், நம் இதயம் கனக்கும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில், ‘லிப்ட்’ திகிலும் திகைப்பும் நிறைந்தது.