நடிகர்கள் : சாந்தனு, பாக்யராஜ், அதுல்யா ரவி, ஊர்வசி, யோகி பாபு
இசை ; தரண் குமார்
ஒளிப்பதிவு : ரமேஷ் சக்கரவர்த்தி
தயாரிப்பு : லிப்ரா புரொடக்ஷன்ஸ் வி.சி.ரவீந்திரன்
இயக்கம் : ஸ்ரீஜர்
சாந்தனுவுக்கும், அதுல்யாவுக்கும் திருமணம் நடக்கிறது. முதலிரவு அன்று உடலுறவில் ஈடுபட கூடாது என்ற முடிவில் சாந்தனு இருக்க, அன்றைய இரவில் உடலுறவில் ஈடுபட்டே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் அதுல்யா இருக்கிறார். இவர்களுடைய இத்தகைய நிலைக்கு என்ன காரணம்?, இறுதியில் முதலிரவு நடந்ததா இல்லையா, என்ற கருவை மட்டுமே வைத்துக்கொண்டு, ஒரே அறையில் முழு படத்தையும் காட்டுவது தான் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’.
இளமை துள்ளளோடு சாந்தனும், அதுல்யாவும் நடித்திருக்கிறார்கள். புதுமண தம்பதியாக இருவருக்குமான கெமிஸ்ட்ரி ரசிக்க வைக்கிறது.
யோகி பாபு, மனோபாலா, பாக்யராஜ், ஊர்வசி ஆகியோர் கொடுத்த வேலையை மிக சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒரே அறையில் நடக்கும் கதை என்றாலும் ஒளிப்பதிவாளர் ரமேஷ் சக்கரவர்த்தியின் தன்னால் முடிந்தவரை காட்சிகளை வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார்.
தரண் குமாரின் இசையில் பாடல்கள் துள்ள ரகம், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது.
ஒரே அறையில், ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்துக்கொண்டு முழு படத்திற்கான திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் ஸ்ரீஜரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அதே சமயம், காட்சிகளை கையாண்ட விதத்தில் இன்னும் கூட மெனக்கெட்டு இருக்கலாம்.
முதல் இரவு தான் மையக்கரு என்பதால், படத்தில் ஏகப்பட்ட இரட்டை அர்த்த வசனங்கள் வருகின்றன. ஆனால், அவை காட்சிகளுடன் ஒட்டாமல் இருப்பதால் சற்று நெருடலாக இருக்கிறது.
காமெடி ரொமான்ஸ் ஜானரில் கதை சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் ரொமான்ஸை சுவாரஸ்யமாக சொல்லியது போல், காமெடி காட்சிகளை சிரிக்கும்படி அமைத்திருந்தால் படம் அனைவரையும் கவர்ந்திருக்கும்.
மொத்தத்தில், ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ பரவாயில்லை ரகமே.