பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய ’எஃப்.ஐ.ஆர்’ படக்குழு

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்த படம் ‘எஃப்.ஐ.ஆர்’. அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்கிய இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக பத்திரிகையாளர்களை சந்தித்த படக்குழுவினர், கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

நிகழ்ச்சியில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் எம்.செண்பகமூர்த்தி அவர்கள் தயாரிப்பாளர், நடிகர் விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து பரிசளித்தார்.

ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் பேசுகையில், “ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு நன்றி. வெற்றிப்படத்தில் இருக்க வேண்டுமென்கிற எனது 8 வருட கனவை இப்படம் நிறைவேற்றியுள்ளது. விஷ்ணு ஒரு நல்ல மனிதனாக என்னை கவர்ந்துள்ளார். இந்த கோவிட் காலத்தில் எல்லோரும் கஷ்டப்பட்டோம், அதை மறந்து நம்மை மகிழ்ச்சிபடுத்த இந்த படம் வந்துள்ளது. மனு ஒரு பிரில்லியண்ட் ரைட்டர். இந்தப்படம் முதல் பிரதி பார்த்த போதே மிகப்பெரிய வெற்றிபெறும் என நம்பிக்கை வந்தது. ரைசாவை படத்தில் அசத்திவிட்டார். அனைத்து நடிகர்களும் அட்டகாசமாக நடித்துள்ளனர். சில்வா மாஸ்டர் அருமையாக சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளார். படத்தின் குழு அனைவருக்கும் நன்றி. மற்றும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கும் மீடியா நண்பர்களுக்கும் நன்றி.” என்றார்.

ஜீ.கே.பிரச்சன்னா பேசுகையில், “பல இடங்களிலிருந்து படத்திற்கு பாராட்டுக்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த படத்தில் வேலை செய்வது சவாலாக இருந்தது. படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறோம். படம் வெற்றி பெற்றிருப்பது பெரும் மகிழ்ச்சி.” என்றார்.

இசையமைப்பாளர் அஷ்வத் பேசுகையில், “இது எனது முதல் சக்ஸஸ் மீட், நிறைய பாராட்டுகள் குவிந்து வருகிறது. படத்தை பற்றி அனைவரும் நல்லபடியாக எழுதியிருந்தார்கள் இந்த வெற்றி இயக்குநரை தான் சாரும், மனுவுக்கு நன்றி. இந்தப்படத்திற்கு ஒவ்வொரு பாடலுக்கும் லிரிகல் வீடியோ செய்து, என் பெயர் போட்டு என்னை விளம்பரபடுத்தினார்கள் அதற்கு தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய நன்றி. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டதால் இப்படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை எனக்கு தந்த விஷ்ணு பிரதருக்கு நன்றி.” என்றார்.

நடிகர் வினோத் பேசுகையில், “எங்களை மாதிரி புது ஆக்டருக்கு இந்த தருணம் மிகப்பெரிது. எங்களை மேடையேற்ற வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் எங்களை மதித்த விஷ்ணு விஷால் சாருக்கு நன்றி. நடிகராக ஆக வேண்டுமென்பது 15 வருட ஆசை. யாரிடம் கேட்பது என தெரியவில்லை, என்னை நம்பி எனக்கு இந்த ரோலை தந்த மனு சாருக்கு மிகப்பெரும் நன்றி. இந்த குழு என்னுடைய இரண்டாவது குடும்பம். கோவிட் முடிந்து கஷ்டத்தில் இரண்டாவது ஷெட்யூல் தொடங்கிய முதல் நாளில் எங்களுக்கு சம்பளம் வந்ததா என கேட்டு, அதை அங்கேயே செக் போட்டு தரச்சொன்னார் விஷ்ணு சார். சிக்கலான காலங்களில் ஒரு தயாரிப்பாளராக இப்படி நடந்து கொள்வது அவ்வளவு எளிதானதல்ல, அவரின் நல்ல மனதிற்கு அவருக்கு நன்றி.” என்றார்.

தங்கதுரை பேசுகையில், “இந்தப்படத்தின் கதை கேட்ட போதிலிருந்தே இதன் மீது நம்பிக்கை இருந்தது. நீங்களும் ஆதரவு தந்துள்ளீர்கள், மக்களும் ரசித்தார்கள். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது எல்லோருக்கும் நன்றி.” என்றார்.

நடிகை ரைசா வில்சன் பேசுகையில், “இந்த கேரக்டரை நான் செய்வேனா என எல்லோரையும் போல எனக்கும் டவுட் இருந்தது, ஆனால் மனு மட்டும் மிக நம்பிக்கையுடன் இருந்தார். விஷ்ணு விஷாலின் நம்பிக்கையும், அவரது தேர்வும் எனது மிகச்சிறந்த உழைப்பைத் தர, உந்தித் தள்ளியது. விஷ்ணு விஷால் இப்படத்தை செய்தே தீருவேன் என உறுதியாக இருந்தார். இந்த படத்தில் இரண்டு பேர் மட்டும் அந்தளவு நம்பிக்கையாக, உறுதியாக இருந்தார்கள். அப்படிப்பட்ட படம் கண்டிப்பாக தோற்காது. படத்தை பாராட்டிய அனைவருக்கும் நன்றி.” என்றார்.

இயக்குநர் மனு ஆனந்த் பேசுகையில், “இந்த படம் என்னால் பண்ண முடியும் என நம்பி வாய்ப்பு தந்த விஷ்ணு விஷால், தங்கதுரை சார் இருவருக்கும் நன்றி. இந்த கதையை என்னால் எடுக்க முடியாது என நான் நினைத்த போது, இவர்கள் என் மீது நிறைய நம்பிக்கை வைத்தார்கள். படக்குழு அனைவருக்கும் எனது கஷ்டங்கள் தெரியும், என்னை நம்பிய விஷ்ணு விஷால் மற்றும் என் குழுவினர் அனைவருக்கும் நன்றி. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை நம்பி பெரிய அளவில் எடுத்து சென்றுள்ளனர். இந்தப் படத்தை ஆதரவு தந்து தூக்கிவிட்டது பத்திரிக்கை நண்பர்களாகிய நீங்கள் தான் உங்களுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் பேசுகையில், “ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மீடியா தரும் ஆதரவை நான் என்றும் மறக்கவே மாட்டேன். விஷ்ணு விஷால் அடுத்த லெவலுக்கு போய்விட்டார் என எல்லோரும் பாராட்டியிருந்தார்கள், அதற்கு காரணம் மனு தான். உங்களுக்கும், மனுவுக்கும் நன்றி. நான் மனுவிடம் கதை கேட்ட போது ஃபேமிலிமேன், மாநாடு வந்திருக்கவில்லை. அது வந்த போது மனுவை அழைத்து பேசினேன், என்னிடம் அப்போது இரண்டு சாய்ஸ் இருந்தது, ஆனால் நான் துணிந்து தயாரித்தேன். ஏற்கனவே இப்படத்தை ஒரு தயாரிப்பாளர் மறுத்து விட்டபோது, மீண்டும் இப்படத்தை நிறுத்தினால் ஒரு டைரக்டருக்கு என்ன நடக்குமென எனக்கு தெரியும். அதனால் நான் இதை தயாரித்தே தீருவது என முடிவு செய்தேன். ராட்சசசனுக்கு பிறகு நடிகராக இது எனக்கு இராண்டாவது வாய்ப்பு, ஆனால் அதை வெற்றியாக சாதித்து காட்டிய மனுவுக்கு நன்றி. மைனா படத்தின் வெற்றி விழாவிற்கு போனபோது ரெட் ஜெயன்ட் மூவிஸ் எனது படம் பண்ணுவார்களா? என்ற ஆசை இருந்தது. நீர்ப்பறவை முதல் இப்போது வரை பெரிய ஆதரவு தந்துள்ளார்கள். ஷ்ரவந்தி ‘லைஃப் ஆஃப் பை’ ஹாலிவுட் பட நடிகை, என் படத்தில் எக்ஸிக்யூட்டிவ் புரடியூசராக பணியாற்றியுள்ளார். அவருக்கு நன்றி. தங்கதுரை சாருக்கு நன்றி. என் படத்தில் மூன்று நாயகிகள் நடித்துள்ளார்கள் ஆனால் ஒரு நிகழ்ச்சிக்கு கூட மூன்று பேரையும் என்னால் ஒன்றாக இணைக்க முடியவில்லை, அது ஒரு சின்ன கவலை. அப்புறம் உதய் அண்ணா, அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. குள்ள நரிக்கூட்டம் முதல் இப்போது வரை அவர் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. எல்லோரும் நான் சரியாக செக் எழுதிக்கொடுத்தேன் என்றார்கள், ஆனால் அதன் பின்னால் உள்ள கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும், இந்தப்படம் ஒரு கட்டத்தில் பெரிய பட்ஜெட்டாக வந்து நின்ற நேரத்தில், கடுமையான சிக்கல் உண்டானது, அப்பா வந்து கடன் வாங்காதே என்று அவரது பென்சன் பணத்தை தந்து உதவினார் அவருக்கு நன்றி.” என்றவர் மேடையில் கண்கலங்கி விட்டார்.

director manu anandfir success meetfir team celebrate successmanjuma mohanRaiza Wilsonreba moica johntamil movie firvishnu visha