‘எனிமி’ விமர்சனம்


நடிகர்கள் : விஷால், ஆர்யா, மிர்னாளினி, மம்தா மோகன் தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா மற்றும் பலர்
இசை : எஸ்.தமன், சாம்.சி.எஸ்
ஒளிப்பதிவு : ஆர்.டி.ராஜசேகர்
இயக்கம் : ஆனந்த் சங்கர்
தயாரிப்பு : வினோத்குமார்

சிறு வயதில் நண்பர்களாக போட்டி போடும் விஷல் மற்றும் ஆர்யா, பெரியவர்களான பிறகு எதிரிகளாக போட்டி போடுகிறார்கள். நண்பர்களாக இருந்த அவர்கள் எதிரிகளானது எப்படி? எதற்காக அவர்கள் போட்டி போடுகிறார்கள்? என்பதே ‘எனிமி’ படத்தின் கதை.

அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள், அப்பா செண்டிமெண்ட், தமிழ் மக்கள் மீதிருக்கும் பற்றை வெளிப்படுத்துதல், காதல் என அனைத்து ஏரியாவிலும் நடிக்க கூடிய வாய்ப்பு விஷாலுக்கு கிடைத்திருக்கிறது. அவரும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

ஸ்டைலிஷான வில்லனாக நடித்திருக்கும் ஆர்யா, ஆர்பாட்டம் இல்லாத வில்லத்தனத்தை வெளிப்படுத்துவதோடு, காதல் மனைவிக்காக எதையும் செய்ய துணிந்தவராகவும் நடிப்பில் அசத்துகிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் மிர்னாளினி, பாடல்களுக்கு மட்டும் ஆட்டம் போட்டுவிட்டு, கதைக்கு சம்மந்தம் இல்லாதவராக ஒதுங்கிக்கொள்கிறார்.

ஒரு சில காட்சிகளில் மட்டும் தலைகாட்டியிருக்கும் மம்தா மோகந்தாஸ் வேடம் நிறைவாக உள்ளது.

தம்பி ராமையா மற்றும் பிரகாஷ்ராஜ் வழக்கமாக தங்களது வேலையை மிக சரியாக செய்திருக்கிறார்கள்.

காமெடி ஏரியாவை கவனித்துக் கொள்ளும் கருணாகரன் வரும் காட்சிகளில் நமக்கு சிரிப்பு வரவில்லை என்றாலும், ஒரு சில இடங்களில் நம்மையும் அறியாமல் சிரித்து விடுகிறோம்.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் பிரமாண்டமாக இருக்கிறது. இசையமைப்பாளர் தமனின் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையமைத்திருக்கும் சாம்.சி.எஸ், வெறும் சத்தத்தை மட்டுமே நிரப்பியிருக்கிறார்.

சிங்கப்பூர் தான் கதைக்களம். ஆனால், துபாயில் படமாக்கியிருக்கிறார்கள். துபாய் என்பது தெரியாத வகையில் படக்குழு காட்சிகளை கையாண்டிருப்பதோடு, கலை இயக்குநர் ராமலிங்கத்தின் கைவண்ணத்தில் சிங்கப்பூர் லிட்டில் இந்தியா செட்டு அமர்க்களம்.

இரண்டு மிகப்பெரிய ஹீரோக்களையும் சமமாக கையாண்டு, அவர்களுக்கு இடையே நடக்கும் போட்டிகள் மூலம் திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்தும் இயக்குநர் ஆனந்த் சங்கர், கதையை மெருகேற்ற இன்னும் கூட உழைத்திருக்கலாம்.

சுவாரஸ்யமான காட்சிகளும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடக்கும் ஆபத்துகள் ஆகியவை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறது.

மொத்தத்தில், ‘எனிமி’ சில குறைகள் கொண்டவையாக இருந்தாலும், ஏமாற்றம் இல்லை.

Aryadirector anand shankarenemy reviewkollywood movie enemy reviewkollywood movie reviewmamtha mohandassmrnalini raviproducer vinod kumartamil movie enemy reviewVishal