நடிகர்கள் : ஜான் விஜய், சித்தார்த், ஸ்ரீராம் கார்த்திக், அஞ்சலி நாயர், ரவீனா, விஜய் ஆனந்த் மற்றும் பலர்
இசை : சிவநேசன்
ஒளிப்பதிவு : சாம்ராட்
தயாரிப்பு : விடியல் ராஜு
இயக்கம் : எஸ்.சுரேஷ் குமார்
கொடைக்கானலில் உள்ள வனப்பகுதியில் சுற்றுலாவுக்கு வரும் நான்கு நண்பர்கள் விருந்தினர் மாளிகை ஒன்றில் தங்குகிறார்கள். அதே, இடத்தில் மருத்துவ தம்பதியும், அவர்களுடைய 10 வயதுள்ள மகளும் தங்குகிறார்கள். நான்கு நண்பர்களுடன் நட்பாக பழகும் மருத்துவர் குடும்பம், அவர்களுடன் சேர்ந்து வனப்பகுதியை சுற்றி பார்க்கும்போது, நான்கு நண்பர்களில் ஒருவருடன், சிறுமி நட்பாக பழக தொடங்குகிறார். திடீரென்று அந்த வாலிபரும், சிறுமியும் காணாமல் போய்விடுகிறார்கள். அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், வாலிபர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்படுகிறார். அவரை கொலை செய்தது யார்? காணாமல் போன அந்த சிறுமி என்ன ஆனார்? போன்ற கேள்விகளுக்கான விடை தான் ‘அகடு’ படத்தின் கதை.
சாதாரண கதையாக இருந்தாலும், அதை சாமர்த்தியமான திரைக்கதை மூலம் சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.சுரேஷ் குமார்.
கதையையும், காட்சிகளையும் நாயகன், நாயகியாக வடிவமைத்திருக்கும் இயக்குநர், நடிகர்களை கதாப்பாத்திரமாக கச்சிதமாக கையாண்டுள்ளார்.
சித்தார்த், ஸ்ரீராம் கார்த்திக் மற்றும் இரண்டு பேர் என நான்கு நண்பர்களாக நடித்தவர்கள், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
டாக்டர் தம்பதிகளாக நடித்திருக்கும் விஜய் ஆனந்த், அஞ்சலி நாயர் மற்றும் அவர்களுடைய மகளாக நடித்திருக்கும் ரவீனா ஆகியோர் அளவான நடிப்பினால் கவர்கிறார்கள்.
படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்க, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜான் விஜய், மட்டும் கொடுத்த வேலையை விட கூடுதலாக நடித்து, படம் பார்ப்பவர்களை கொன்று எடுத்து விடுகிறார்.
ஜான் சிவநேசனின் இசை, சாம்ராட்டின் ஒளிப்பதி, தியாகுவின் படத்தொகுப்பு ஆகியவை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
அடுத்தது என்ன நடக்கும்? என்ற கேள்வியோடு படம் பார்க்க வைக்கும் திரைக்கதை, குற்றவாளியையையும், குற்றத்தின் பின்னணியையும் யூகிக்க முடியாதபடியான காட்சி அமைப்பு ஆகியவற்றால் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும் இயக்குநர் எஸ்.சுரேஷ் குமார், தான் சொல்ல வந்ததை எளிமையாக சொல்லியிருந்தாலும், மிக நேர்த்தியாகவும், அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
மொத்தத்தில், குறைகள் சில இருந்தாலும், ‘அகடு’ சமூகத்திற்கு அவசியமான கருத்தை சொல்லும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உள்ளது.