தீபாவளிக்கு பத்தாயிரம் வாலா சிரிப்பு வெடியை தியேட்டர்களில் கொளுத்திப் போட்டிருக்கிறார் டைரக்டர் எம்.ராஜேஷ். வழக்கமாக அவரின் ஆஸ்தான காமெடி கலைஞர் சந்தானம் இந்த முறையும் நன்றாகவே கைகொடுத்திருக்கிறார். கூடவே சிரிக்காமல் சந்தானத்தை போட்டு வாங்கும் ஹீரோ கார்த்தியின் நய்யாண்டி நடிப்பும் சேர தியேட்டரே சிரிப்பலையில் தத்தளிக்கிறது.
அம்பாசமுத்திரம் பக்கத்தில் ’AAA’ என்ற லோக்கல் சேனல்நடத்தும் கார்த்தி அழகுராஜாவாக வந்து சேனலை எப்படியாவது நம்பர் ஒன் சேனலாக உயர்த்த நினைக்கிறார். இந்த எம்.டிக்கு ஆபீஸராக வந்து சேர்கிறார் சந்தானம். எப்படியாவது பெரிய கம்பெனியில் விளம்பர படம் எடுக்கவாய்ப்பு வாங்கிவிட்டால் போதும் என்று ‘சொக்கத்தங்கம் ஜீவல்லரி’ முதலாளி கோட்டா சீனிவாசராவை சந்திக்கப்போகிறார்கள். அங்கிருந்து தொடங்குகிறது காமெடி கலாட்டா. சந்தானத்திற்கு பெண் வேடம் போட்டு விட்டு விளம்பர படத்தை எடுக்க சொக்கத்தங்கம் கோட்டா சந்தானத்தின் பின்னாலே சொக்கிப் போய் அலைகிறார். சேனலுக்கு அடுத்த புரமோவாக வி.எஸ்.ராகவன் நடத்தும் பண சீட்டு கம்பெனிக்கு போகிறார்கள். இதில் தொழிலதிபர் மகள் காஜல் அகர்வாலை ‘உங்க பணத்துக்கு நான் கேரண்டி’ என்று நடிக்கவைத்து வம்பில் மாட்டவைக்கிறார்கள். கடைசியில் காஜலுக்கு பரதம் கற்றுக் கொடுக்க தில்லானாதிவ்யநாதனாக எம்.எஸ்.பாஸ்கரை அழைத்து வர சிரிப்பில் தியேட்டர் தீப்பிடிக்கிறது.
கார்த்தி இந்த படத்திலும் யாதார்த்தமாக காமெடி பண்ணி நடித்திருக்கிறார். ‘நீ இப்பவே டிஸ்மிஸ்’ என்று கரறாக சந்தானத்தை ப்ளாக் மெயில் செய்வதும், அப்பா பிரபு, அம்மா சரண்யாவிடமும் பாசத்தில் இழையும் போதும் மின்னுகிரார். அதுவும் அந்த எண்பதுகளின் ப்ளாஷ் பேக் காட்சிகளில் கார்த்தியும், சந்தானமும் பட்டையை கிளப்புகிறார்கள். கார்த்தி நம்பவே முடியாதபடி பிரபு போலவே ஹேர் ஸ்டைல், உடல்மொழி, பாடல் காட்சியில் நடனம் என்று பின்னி பெடல் எடுக்கிறார். காஜல் எழுதிய கவிதையை உருகி உருகிசொல்லி அவரை பிக் அப் பண்ணும் அந்த இடம் சூப்பர்.
கல்யாணம் ஆகாத கல்யாணமாக வந்து வயிற்றில் வண்டியோட்டுகிறார் சந்தானம். ‘ஓகோன்னான’ என்று அவர் ஓங்கி குரல் கொடுக்கும் போதெல்லாம் திரை கிழிகிறது சிரிப்பு சத்தத்தில். கரீனா கபூராக வந்து கவர்ச்சி காட்டும் இடமெல்லாம் பெண்கள் பகுதியில் இருந்து சந்தானத்திற்கு ஒரு ஸ்பெஷல் கரகோஷம் கேட்கிறது. அதனால் இனிபெண்கள் குறித்த வசனங்களில் அக்கறையான எச்சரிக்கை தேவை. இரண்டாம் பாதியில் எம்.ஆர்.ராதா ஜிப்பாவும் எப்போதும் குதப்பிய வெற்றிலை வாயுமாக வந்து அதகளப்படுத்துகிறார். ”நான் நல்லா பாடுறேனா” என்று எல்லோரிடமும் அப்பாவியாக கேட்கும் காஜல் ரசிக்கவைக்கிறார். அதுவும் பாஸ்கரிடம் பரதம் கற்றுக் கொள்ளும் இடத்திலும், சந்திரமுகி பார்க்கும் இடத்திலும் ‘ச்சோ ஸ்வீட்’ சூப்பர். சரண்யாவும், பிரபுவும் நிறைவான நடிப்பில் ஜொலிக்கிறார்கள். சரண்யா பிரபுவிடம் சிரிக்கும் அந்த வெகுளிச்சிரிப்பு அள்ளுகிறது. கோட்டா சீனிவாசராவ், நரேன், ரசிக்க வைக்கிறார்கள்.
தமன் இசையில் பாடல்கள் கேட்கும்படி ஒலிக்கிறது. அப்படியே எண்பதுகளில் வந்த இசையை டிஜிட்டலில் கொடுத்திருக்கிறார். வழக்கமாக தனது படங்களில் க்ளைமேக்ஸ் காட்சிகளில் உச்சபட்ச சிரிப்பை வரவழைப்பார் ராஜேஷ். அது இந்தபடத்திலும் நடந்திருக்கிறது. ஆனால் அடுத்தப் படத்தில் கொஞ்சம் கதையோடு வாருங்கள் ராஜேஷ்.
படத்தில் ஒரே உறுத்தல் இன்னமும் தென்மாவட்டங்களில் சந்தையிலும், எதோ ஒரு தெருக்களிலும், திருவிழாக்களிலும் அடி வடிற்றுப் பசிக்காக சாட்டையால் அடித்துக் கொள்ளும் அந்த மனிதர்களை நிஜமாகவே சாட்டையில் அடிக்கும் அந்த வசனம் தேவையா? மாற்று தொழில் தெரியாமல் வெற்றுமேனியோடு குழந்தைகளுடன் வெய்யிலில் அலையும் அவர்களை அப்படி இழிவு படுத்த வேண்டுமா. இப்போதும் அவர்கள் தியேட்டர்களில் அமர்ந்து படம் பார்ப்பதை பார்க்கமுடியும். இந்த சின்ன குறை இருந்தாலும் அழகுராஜா அழகிய ராஜாதான்.
தேனிகண்ணன்.