பிரிக்கமுடியாதது எது என்று கேட்டால் அஜீத்தும் பைக்கும் என்று சொல்லும் அளவுக்கு அஜீத் ஒரு பைக் ரேஸ் பிரியர் என்பது ஊரறிந்த விஷயம். மார்க்கெட்டில் அதிநவீன பைக்குகள் இறக்குமதியானால் முதல் நபராக அதை சென்று பார்ப்பவர், பிடித்து விட்டால் என்ன விலை என்றாலும் வாங்கி விடுவார். அப்படி அவர் 24 லட்சம் மதிப்பில் BMW 1000 ஆர்.ஆர் ரக டுக்காட்டி பைக் ஒன்றை தற்போது வாங்கியுள்ளார்.
ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு அவ்வப்போது சென்னை நகர வீதிகளில் உலாவருவது அஜித்திற்கு பிடித்தமான ஒன்று. சிலநேரங்களில் அப்படியே நீண்டதூர பயணமும் கிளம்பிவிடுவார் அஜீத். அந்தமாதிரித்தான் சமீபத்தில் பெங்களூர் வரை தனது டுக்காட்டி பைக்கில் ஜாலி ரைட் போய்வந்திருக்கிறார் அஜீத். அஜீத்துடன் பிரபல கார் பந்தய வீரர் கருண் சந்தோகின் தம்பியும், ‘வீரம்’ படத்தில் அவரது தம்பியாக நடிப்பவருமான சுகைல் சந்தோக்கும் கலந்து கொண்டார். இவர் ஒரு கிரிக்கெட் வீரரும் கூட.
ஆனால் இந்தப்பயணம் பற்றி அஜீத் சொல்லும்போது, “இந்த பயணத்தை ஜாலிக்காக மேற்கொள்ளவில்லை. மோட்டார் சைக்களில் செல்பவர்கள் இடையே ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பயணம். நான் அணிந்திருந்த உடையை பார்த்தவர்கள் தோள் மற்றும் கால் முட்டியில் PAD வைத்த உடை அணிவது மற்றும் ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை உணர்ந்திருப்பார்கள்.
புழுக்கமாக இருக்கும் என புலம்புவோர் ரத்தத்தை இழப்பதை விட வியர்வையை சிந்துவது மேல் என யோசிக்கவேண்டும். அதிக செலவு செய்ய வேண்டும் என்று கருதாமல் பாதுகாப்புக்கு தானே என்று செலவு செய்ய வேண்டும். விபத்தில் சிக்கியபின் ஒரு எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுத்தால் அதுவே மொத்தமாக 20 ஆயிரம் செலவாகும். அதை முன்கூட்டியே பாதுகாப்புக்காக செலவிடுவதில் தவறில்லை. விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாங்கள் இதுபோல மேலும் பல பயணங்களை மேற்கொள்ள உள்ளோம்” என்கிறார் அஜீத். தொடரட்டும் அஜீத்தின் விழிப்புணர்வு பயணம்.