நடிகர் சிட்டிபாபு காலமானார்

93

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் சிட்டிபாபு நேற்று மாலை காலமானார். ‘அரி கிரி அசெம்ப்ளி, கமெடி டைம் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான சிட்டிபாபு, 2003-ஆம் ஆண்டில் ஷங்கரின் ‘பாய்ஸ்’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதே ஆண்டில் வெளிவந்த ‘தூள்’ படம் அவருக்கு திரையுலகில் சிறப்பான இடத்தை தந்தது. தொடர்ந்து ‘சிவகாசி’, ‘திருத்தணி’, ‘திண்டுக்கல் சாரதி’, ‘மாப்பிள்ளை’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சிட்டிபாபுவுக்கு ஏற்கனவே இருதய கோளாறு இருந்தது. இதற்காக அவர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பிறகு இரண்டு வருடங்கள் படங்களில் நடிக்காமல் வீட்டில் ஓய்வு எடுத்துவந்த அவர் சமீபகாலமாக மீண்டும் சில படங்களில் நடிக்க தொடங்கினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மயங்கி விழுந்த அவருக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். 49 வயதான சிட்டிபாபுவுக்கு. ஜரினா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.