பிரிக்கமுடியாதது எது என்று கேட்டால் கமலும் திரைப்பட விழாக்களும் என்று சொல்லும் அளவுக்கு கமல் கலந்துகொள்ளாத திரைப்பட விழாக்களே இல்லை என்று சொல்லலாம். இதில் நாம் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், எங்கே திரைப்பட விழா நடந்தாலும் விழாவை நடத்தும் அமைப்புகள் அந்த விழாவில் கலந்துகொள்ள கமலுக்கு முதல் அழைப்பை அனுப்பி விடுவதுதான்.
கமல் பங்கேற்கும்போதுதான் அந்த விழா சிறப்படையும் என்று அவர்கள் நினைப்பதும் ஒரு காரணம். அதேபோல தனது படம் சம்பந்தமான வேலைகள் ஒருபக்கம் இருந்தாலும் இதுபோன்ற வாய்ப்புக்களை கமலும் புறக்கணிப்பதில்லை. அந்தவகையில் வரும் டிசம்பர்-26ல் பெங்களூருவில் நடைபெற இருக்கும் 6-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார் கமல்.
இந்த விழாவில் 45 நாடுகளில் இருந்து 152 படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. இந்த விழாவை கர்நாடக அரசின் சார்பில் கர்நாடக சலனசித்ரா அகாடமியும் கர்நாடக ஃப்லிம் சேம்பரும் இணைந்து நடத்த இருக்கின்றன. டிசம்பர்-26லிருந்து எட்டுநாள் கொண்டாட்டமாக இந்த விழா நடைபெற இருக்கிறது.