இறந்தவர்களை மட்டுமல்ல இருப்பவர்களையும் கொண்டாடுங்கள் – கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்.
செல்வராகவனின் பிரமாண்ட படமான இரண்டாம் உலகம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா அமர்க்களமாக நடந்தது.
விழாவிற்கு மணிரத்னம்,ஆர்யா, அனுஷ்கா, வைரமுத்து உட்பட பலர் வந்திருந்தனர். இந்த விழாவில் வைரமுத்து பேசும்போது, ”தமிழ் திரைப்படப்பாடல்களில் இலக்கியத்தின் சாரத்தை கொண்டுவருவதற்காக இசையமைப்பாளர்களோடும், இயக்குனர்களோடும் நான் பல காலம் சண்டை போட்டுக்கொண்டிருக்கிரேன். ஆண்டிற்கு நூறு படங்கள் வெளியாகின்றன. ஒரு படத்திற்கு ஐந்து பாடல்கள் என்றாலும் ஐநூறு பாடல்கள் ஆகிறது. ஆனால் வெறும் பத்து பாடல்கள் தான் அதிகம் கேட்கப்படுகின்றன. அந்த பத்து பாடல்களில் முத்துபாடலாக இரண்டாம் உலகம் படத்தின் ஒரு பாடல் இருக்கும். இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாடும் இந்த நேரத்தில் அந்த விழாக்குழுவினருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.
தமிழ்சினிமாவில் சாதனை படைத்த மறைந்த மூத்த கலைஞர்களை பாராட்டுவதோடு நின்றுவிடாமல் தயவு செய்து இப்போது நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும், சாதித்துக் கொண்டிருக்கும் கலைஞர்களையும் பாராட்டுங்கள். ஆஸ்கர் விருது கனவை நனவாக்கிய ஏ.ஆர்.ரகுமானை கவுரவம் செய்யுங்கள்.அதேபோல் பாரதிராஜா, மணிரத்னம், பாலசந்தர் ஆகியோரையும் கவுரவப்படுத்துங்கள்.இதுதான் என் வேண்டு கோள்.” என்று கவிஞர் பேசி முடித்த போது அதை ஆமோதிப்பதை போல கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது.
திரைத்தமிழில் இலக்கியம் படைத்த உங்களையும் கவுரவம் செய்யத்தான் வேண்டும் கவிஞரே.